அரசாங்கத்துடன் இணைந்துகொள்ளுமாறு கூட்டமைப்பிற்கு பகிரங்க அழைப்பு!

அரசாங்கத்துடன் இணைந்துகொள்ளுமாறு கூட்டமைப்பிற்கு பகிரங்க அழைப்பு!

அரசாங்கத்துடன் இணைந்துகொள்ளுமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு அமைச்சர் சம்பிக்க ரணவக்க பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார்.

அரசியலமைப்பு நிர்ணயச்சபையில் இன்று(வெள்ளிக்கிழமை) நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

”தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்துடன் இணையவேண்டும். அமைச்சுப் பதவிகளை பெற்று வடக்கு, கிழக்கு பகுதிகளுக்கு சேவையாற்ற முன்வர வேண்டும்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசாங்கத்துடன் இணைவதால், வடக்கு,கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழ் மக்களின் கலை, கலாசார, பண்பாட்டு விழுமியங்களுக்கு எவ்வித அச்சுறுத்தலும் பாதிப்பும் ஏற்படப்போவதில்லை.

அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான், ஆளுங்கட்சியில் அங்கம் வகித்ததால் மலையகத் தமிழ் மக்களின் கலாசாரத்துக்கு அச்சுறுத்தல் – பாதிப்பு ஏற்பட்டதா? இல்லை.

அதேபோல் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்தின் பங்காளிக்கட்சியாக அங்கம் வகிப்பதால் முஸ்லிம் மக்களின் கலாசாரம், பண்பாட்டு விழுமியங்களில் எதாவது மாற்றம் ஏற்பட்டுள்ளதா? இல்லை.

எனவே, எதிர்ப்பு அரசியலைக் கைவிடுத்து, வடக்கு, கிழக்கு மாகாணங்களை கட்டியெழுப்ப அரசாங்கத்துடன் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு இணையவேண்டும்.

கடந்த 50 வருடங்களில் வடக்கு பகுதியில் பெரிதாக எவ்வித தொழிற்சாலையும் உருவாகவில்லை. வேலையில்லாப் பிரச்சினையும் தீர்க்கப்படவில்லை.

அதேவேளை, காலைநிலை மாற்றத்தால் இன்னும் 40ஆண்டுகளில் வடக்கு பகுதி அரைப்பாலைவனமாக மாறக்கூடும். அதை சமாளிப்பதற்குரிய வழிமுறைகள் பற்றியும் ஆராய வேண்டும்“ என தெரிவித்துள்ளார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net