இனவாதத்தைத் தோற்கடிப்பதற்கு இத்தைத்திருநாளில் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்!

இனவாதத்தைத் தோற்கடிப்பதற்கு இத்தைத்திருநாளில் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்!

இனவாதத்தைத் தோற்கடிப்பதற்கு இத்தைத்திருநாளில் அனைத்து சமூகங்களும் ஒன்றிணைய வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

உலகெங்கும் வாழும் தமிழர்கள் இன்று தைப்பொங்கல் திருநாளைக் கொண்டாடிவரும் நிலையில், பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்டுள்ள தனது வாழ்த்துச் செய்தியிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிடுகையில்,

“சிறந்த விளைச்சலை வழங்குவதற்கு மிகவும் உறுதுணையாக இருந்த சூரிய பகவானை வணங்கி, அதற்குப் பங்கிளிப்புச் செய்த மாடுகள் உட்பட முழு இயற்கைக்கும் நன்றிக்கடன் செலுத்தும் நாளாக தைத்திருநாள் காணப்படுகின்றது.

முதலாவது விளைச்சல் திருவிழாவைக் கொண்டாடுவது விவசாய சமூகங்களில் தொன்மைக் காலந்தொட்டு காணப்பட்டு வரும் முக்கியமானதொரு சமய வழிபாட்டு நிகழ்வாகும்.

அவ்வாறான சமய வழிபாட்டு நிகழ்வாகக் கருதப்படும் தென்னிந்தியாவில் ஆரம்பமான தைப்பொங்கல் திருநாள், தற்போது உலகம் முழுவதும் தமிழ் மக்கள் வெகு விமரிசையாகக் கொண்டாடும் மிகவும் முக்கியமான கலாசாரப் பண்டிகையாக மாற்றம் பெற்றுள்ளது.

தைப்பொங்கல் பண்டிகையின் அனைத்துச் சம்பிரதாயங்களும் மனிதனுக்கும் இயற்கைக்குமிடையிலான சகவாழ்வினை அர்த்தமுள்ளதாக மாற்றியமைப்பதுடன், மனித சமூகத்தில் அமைதி, மகிழ்ச்சி, செழிப்பினை நோக்கமாகக் கொண்டு அவை நிறைவேற்றப்படுகின்றன.

இது தமிழ் மக்களுக்கு மாத்திரமன்றி முழு உலக மக்களுக்கும் சமத்துவம் மற்றும் நன்றிக்கடன் செலுத்துவதன் முக்கியத்துவத்தை எடுத்தியம்பும் முக்கிய சந்தர்ப்பமாகும்.

இன, மத அடிப்படைவாத சக்திகளைத் தோற்கடித்து ஜனநாயகத்தை வெற்றி பெறச் செய்துள்ள சந்தர்ப்பத்தில், இம்முறை தைப்பொங்கல் பண்டிகையைக் கொண்டாடக் கிடைத்தமை மகிழ்ச்சியான விடயமாகும்.

பல்வேறுபட்ட சமூகங்களின் சமய, கலாசார உரிமைகளுக்கு மதிப்பளித்து ஒற்றுமையாக வாழ்வதன் பெறுமதியை வலியுறுத்துவதுடன், தைப்பொங்கல் பண்டிகையைக் கொண்டாடும் அனைத்து சகோதர தமிழ் மக்களுக்கும் எனது உளப்பூர்வமான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தனது வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net