மஹிந்த தொடர்பில் மைத்திரியிடம் கோரிக்கை விடுத்துள்ள சந்திரிக்கா!

சமகால ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க விசேட கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தரப்புடன் இணைந்து கொள்ள வேண்டாம் என ஜனாதிபதியிடம் அவர் கோரியுள்ளார்.
கடிதம் ஒன்றின் ஊடாக சந்திரிக்கா பண்டாரநாயக்க இந்தக் கோரிக்கையை ஜனாதிபதியிடம் முன்வைத்துள்ளார்.
மக்களினால் நிராகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் தரப்புக்களுடன் இணைந்து அரசியல் செய்ய வேண்டாம் என அவர் கோரியுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயற்பாட்டாளர்களை அண்மையில் சந்தித்ததாகத் தெரிவித்துள்ளார்.
கட்சியின் தற்போதைய நிலைமை குறித்து அதிருப்தி அடைந்துள்ள தரப்பினருக்கு கட்சியில் நீடிக்குமாறு தாம் ஆலோசனை வழங்கியதாகவும் கட்சியை பலப்படுத்துமாறு கூறியதாகவும், சந்திரிக்கா கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த 2005ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரையிலான காலப் பகுதியிலேயே நாட்டில் பல்வேறு அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விடப்பட்டதாகவும் பாரியளவில் ஊழல் மோசடிகள் இடம்பெற்றதாகவும் இதனை தாம் மறந்துவிடவில்லை எனவும் சந்திரிக்கா தெரிவித்துள்ளார்.
கடந்த 2015ம் ஆண்டு ஜனவரி மாதம் 8ம் திகதி இந்த தரப்பினரை மக்கள் நிராகரித்துள்ளனர் என்பதனையும் தாம் மறக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மக்களின் ஆணையை நிராகரிக்கக் கூடாது எனவும், இந்த வழியில் பயணித்து அனைவரையும் வழிநடத்துமாறு ஜனாதிபதியிடம் கோருவதாகவும் சந்திரிக்கா தெரிவித்துள்ளார்.
சுதந்திரக் கட்சியின் அடையாளத்தை உறுதி செய்யுமாறு கட்சியின் அமைப்பாளர்கள் விடுத்த கோரிக்கை அடங்கிய கடிதத்தையும் சந்திரிக்கா ஜனாதிபதி மைத்திரிக்கு அனுப்பி வைத்துள்ளார்.