மஹிந்தவின் இனவாதத்தை தோற்கடிப்பாரா சம்பந்தன்?

மஹிந்தவின் இனவாதத்தை தோற்கடிப்பாரா சம்பந்தன்?

இலங்கை அரசியல் வரலாற்றில் இந்தளவு தூரத்திற்கு இனப்பிரச்சனை தீவிரமடைந்துள்ளது என்றால் தென்னிலங்கையில் ஆட்சிப் பீடம் ஏறிய தேசிய கட்சிகளே காரணம்.

தான் ஆட்சி அதிகாரத்தினை கைப்பற்றிக் கொள்ளும் நோக்கில் சிங்கள மக்கள் மத்தியில் தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளை பிரிவினைவாதமாக சித்தரித்து, அதிகாரப் பரவாலக்கல்கள் இடம்பெறுகின்ற போது நாட்டை பிரிப்பதற்கு ஏற்படுத்தப்படும் ஒப்பந்தங்கள், நடவடிக்கைகள் என்று பிரசாரங்களை மேற்கொண்டு நாட்டை இன்று அதள பாதாளத்தினுள் தள்ளிவிட்டிருக்கிறார்கள்.

தனிச் சிங்களச் சட்டமானது பெரும்பான்மைவாததத்pன் அடையாளமாக காணப்பட்ட நிலையில், அது பண்டாரநாயக்கவின் அதிகார ஆசையின் விளைவு. எப்படியாவது ஆட்சியைக் கைப்பற்றிவிட வேண்டும் என்ற நோக்கில் சிங்கள மக்களை திருப்திப்படுத்த எடுத்த முடிவு நாட்டில் தீவிர பேரினவாத அரசியலை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் மக்களுக்கு தனிச்சிங்களச் சட்டம் அநீதி இழைத்துவிட்டது என்று உணர்ந்த தந்தை செல்வா உட்பட்ட அன்றைய தமிழ்த் தலைவர்கள் தனிச்சிங்களத்திற்கு எதிராகப் போர்க் கொடி தூக்கினர். தமிழுக்கும் சம அந்தஸ்து கோரி பல சத்தியாக்கிரகப் போராட்டங்களை முன்னெடுத்தனர்.
தமிழ் மக்களின் எதிர்ப்புக் காரணமாக பண்டா-செல்வா மற்றும் டட்லி-செல்வா ஆகிய ஒப்பந்தங்கள் கைச்சாத்தாகின. ஆனாலும் மாறி மாறி வந்த எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பினால் அவை தன்னிச்சையாகவே தென்னிலங்கையினால் கிழித்துப் போடப்பட்டன.

தமிழ் மக்களின் தீர்வு தொடர்பில் காலத்திற்குக் காலம் பல ஒப்பந்தங்கள் ஏற்படுத்தப்பட்டன. இறுதியில் விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரனுக்கும் ரணில் விக்கிரசிங்கவிற்கும் இடையில் ரணில் -பிரபா ஒப்பந்தம் கைச்சாத்திட்டப்பட்டது. அதுவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் கிழித்து எறியப்பட்டது.

இவ்வாறு தென்னிலங்கையில் ஆளும் தரப்பு தமிழ் மக்களுக்குத் தீர்வை முன்வைக்க முற்படுகின்ற போதெல்லாம் எதிர்த்தரப்பில் இருப்பவர்கள் எதிர்ப்பை வெளியிட்டு, அனைத்தையும் நாசமாக்கும் வேலையினை காலத்திற்குக் காலம் செய்து வருகின்றனர். தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் ஆயுத ரீதியாக மௌனித்து, பத்து வருடங்களை எட்டவுள்ள நிலையிலும், இன்னும் தமிழ் மக்களுக்கான தீர்வு கிட்டவில்லை. ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதற்கு தமிழ் மக்களின் ஆணையினை நாசுக்க கையேந்தி வாங்குகின்ற தென்னிலங்கை ஆட்சியாளர்கள், அதிகாரத்தை பங்கி;ட்டு வழங்குவதற்கு மட்டும் தென்னிலங்கையின் ஒப்புதலை எதிர்பார்த்துக் கிடக்கின்றனர்.

அதிலும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, 52 நாட்கள் தற்காலிக பிரதமராக செயற்பட்ட காலப்பகுதியில், தமிழ் மக்களுக்கான தீர்வினை தன்னால் மட்டுமே வழங்க முடியும் எனத் தெரிவித்திருந்தார். ஆனால் அவர் இரண்டு தடவைகள் நாட்டின் ஜனாதிபதியாக பணியாற்றிய காலப்பகுதியில் அதனை செய்ய விரும்பவில்லை. மீண்டும் அதிகாரத்திற்கு வருவதற்கு தமிழ் மக்களின் ஆணையினைக் கேட்கும் வகையில் அதிகாரப் பங்கீடு, தீர்வு என்றேல்லாம் பொய்யான கருத்துக்களை வெளிப்படுத்தியிருந்தார்.

மஹிந்தவின் தமிழ் தொடர்பான அக்கறையும், கருசனையும் போலியானவை என்பதை அவரின் செயற்பாடுகள் மீண்டும் நிரூபனம் செய்துள்ளன. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தமிழ் மக்களுக்குத் தீர்வினைப் பெற்றுக் கொடுப்பதற்கும், நாட்டில் நிலவும் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணும் வகையிலும் புதிய அரசியல் அமைப்பினைக் கொண்டு வருவதற்கான முயற்சியினை எடுத்துவரும் வகையில் புதிய அரசியல் அமைப்பிற்கான வரைபு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் புதிய அரசியல் அமைப்பு நாட்டைப் பிளவுபடுத்தும் எனவும், புலம்பெயர் விடுதலைப்புலிகளின் தேவைக்கு ஏற்ப ரணில் அரசாங்கம் செயற்படுவதாகவும் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துவருகின்றார்.

இத்தகைய பிரிவினைவாதக் கருத்துக்களைப் பகிர்ந்து சிங்கள மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி அதனூடாக தனது அரசியலை மேற்கொள்ளவதற்கான எத்தனித்துவருகின்றார். மேலும் அவருடன் இருக்கின்ற, விமல் வீரவங்ச, உதய கம்மன்பில உட்பட்ட தீவிர பேரினவாதத் தலைவர்களும் சிங்கள மக்களை குழப்பும் வகையில் கருத்துக்களை பரப்பி வருகின்றனர். அதேவேளை பௌத்த குருமார்களையும் அச்சப்படுத்தி அவர்கள் ஊடாக நாட்;டு மக்களை திசைதிருப்பி, ஆட்சி அதிகாரத்தினைப் பெற்றுக் கொள்வதற்கு இத்தகைய பௌத்த பேரினவாதிகள் முயன்று வருகின்றனர்.

உண்மையில் அதிகாரப் பகிர்வு என்பது நாட்டை ஒன்றுபடுத்துமே அன்றி பிளவிற்குள் கொண்டு செல்லாது. உலகில் முதன்மை ஜனநாயக நாடாக அறியப்;படும் சுவிஸில் பூரணமான அதிகாரப் பகிர்வு 26 மண்டலங்களுக்கும் (CANTONS) வழங்கப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பிட்டளவு இராணுவத்தினர் சொந்தமாக வைத்திருப்பதற்கும் ஒவ்வொரு மண்டலங்களுக்கும் அதிகாரமளிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளும் அதிகாரங்களை மாநிலங்களுக்கு வகுத்து வழங்கியுள்ளன. உண்மையில் இலங்கையில் ஏற்பட்டுள்ள இன ரீதியான முரண்பாடுகளை உரிய வகையில் தீர்ப்பதற்கு சமாந்திரமாக பொருளாதார அபிவிருத்திகளும், அதிகாரப் பங்கீடுகளும் சகல தரப்பினருக்கும் வழங்கப்பட வேண்டும். அதிலும் யுத்தத்தின் கொடுமையினால் சகலவற்றையும் இழந்து தவிக்கின்ற தமிழ் மக்களுக்கான பொருளாதார அபிவிருத்தி என்பது முக்கிய கூறாக இருக்கின்றது. இதனூடாக மக்களின் வாழ்க்கைத் தரத்தினை மாற்ற வேண்டும்.

மேலும் வடக்கு கிழக்கு இணைப்பினை அடிப்படையாகக் கொண்ட, அதிகாரப் பகிர்வினை வலியுறுத்திப் பெற்றுக் கொள்வதன் ஊடாக எதிர் காலத்தில் ஏற்படும் இன ரீதியான ஒடுக்குமுறைகளையும், அடக்குமுறைகளையும் தவிர்த்துக் கொள்ளலாம். இலங்கை அரசியலில் பண்டாரநாயக்க அன்று போட்ட இனவாத அரசியல் எதிர்காலத்திலும் தொடரப் போகிறது. ஆகவே ஈழத்தமிழ் மக்களின் எதிர்காலத்தையும் இருப்பையும் பாதுகாக்கும், வகையில் கூட்டமைப்பினர், பிரதமர் ரணில் விக்கிரசிங்கவிற்கு கொடுத்த ஆதரவினை அடிப்படையாகக் கொண்டு, உரிய அதிகாரப் பகிர்வினையும் தீர்வினையும் பெற்றுக் கொள்வதே சிறந்த சாணக்கியமாகும்.

பேரிவாத சிந்தனைவாத அரசியல்வாதிகளின் பொய்யான பிரசாரங்களுக்கு அஞ்சாமல் தற்துணிவுடன் தமிழ் மக்களுக்கான தீர்வு விடயத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கள அர்ப்பணிப்புடன் பணியாற்றி, தமிழ் மக்களுக்கு நன்றிக் கடன் செலுத்த வேண்டும் என்பதே ஈழத்தமிழ் மக்களின் எதிர்பார்ப்பாகும்.

பா.யூட்

Copyright © 6990 Mukadu · All rights reserved · designed by Speed IT net