கூட்டமைப்புடன் எந்த இரகசிய உடன்பாடும் இல்லை!
ஐக்கிய தேசியக் கட்சிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் எந்தவொரு இரகசிய உடன்பாடும் இல்லை என அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.
கண்டியில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“புதிய அரசியலமைப்பு தொடர்பாக, நாம் நிபுணர்களின் அறிக்கையொன்றைத் தான் சமர்ப்பித்துள்ளோம். இன்னும் வரைபொன்றைக் கூட நாம் தயாரிக்கவில்லை.
இது அரசியலமைப்பல்ல. அரசியலமைப்புச் சபைத் தான் அரசியலமைப்பை தயாரிக்கும் பணியை மேற்கொள்ளும். எதிர்க்கட்சிகள் கூறுவதுபோல, இது பின்கதவால் கொண்டுவரப்பட்ட ஒன்றல்ல.
ஒற்றையாட்சி முறைமை மாறாது என்ற சரத்துக்கு இலங்கை வரலாற்றிலேயே முதன் முறையாக தமிழ்த் தரப்பினர் ஆதரவு வழங்கியுள்ளனர். இதில், ஏக்கிய எனும் பதம் மூன்று மொழிகளிலும் மொழி மாற்றம் செய்யப்படாது அவ்வாறு இடம்பெறும்.
அதேபோல், பௌத்தத்துக்கு முன்னுரிமை வழங்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட அனைத்தக் கட்சிகளும் சம்மதம் தெரிவித்துள்ளன.
இந்தநிலையில், மாகாணசபைகளை சக்திமிக்கதாக மாற்றுவது தொடர்பில்தான் நாம் தற்போது, வழிநடத்தல் குழுவில் ஆராய்ந்து வருகிறோம்.
முதன்முறையாக, அரசியலமைப்பு ஸ்தாபிக்கும் பணியில் தமிழ்ப் பிரதிநிதிகள் பங்கேற்கிறார்கள். மேலும், அரசியல் சூழ்ச்சி இடம்பெற்றபோதும், அவர்கள் அரசியலமைப்பை பாதுகாக்கும் பணியில் தீவிரமாக செயற்பட்டார்கள்.
இதுவே எமக்கான வெற்றியாகத் தான் கருதுகிறோம். அதேநேரம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்மிடம் எந்தவொரு நிபந்தனையையும் விதிக்கவில்லை.
அவர் கோரியது ஒன்றை மட்டும்தான். அதாவது, தெற்கில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்திகளை வடக்கிற்கும் செய்ய வேண்டும் என்று தான் கேட்டார்கள்.
மேலும், அமைச்சரவையின் முடிவுகள் அவர்களுடன் கலந்தாலோசித்துத் தான் எடுப்பதாகக் கூறப்படுவதுகூட முற்றிலும் பொய்யான ஒரு கருத்தாகும்” என லக்ஷ்மன் கிரியெல்ல மேலும் தெரிவித்தார்.