விடுவிக்கப்பட்ட இந்திய மீனவர்களின் படகுகள் கையளிப்பு

விடுவிக்கப்பட்ட இந்திய மீனவர்களின் படகுகள் கையளிப்பு

இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டு விடுவிக்கப்பட்ட படகுகளை இந்தியாவிலிருந்து வந்த மீட்புக்குழுவினர் பெற்றுக்கொண்டனர்.

அந்தவகையில், இலங்கை நீதிமன்றங்களால் விடுவிக்கப்பட்ட இராமேஸ்வரத்தைச் சேர்ந்த ஒன்பது படகுகளை அவர்கள் நேற்று (சனிக்கிழமை) பெற்றுக்கொண்டனர்.

இராமேஸ்வரம் துறைமுகத்திலிருந்து 9 படகுகளில் மீன்பிடித் தொழிலாளர்கள், படகு உரிமையாளர்கள், இயந்திரம் மற்றும் படகு பழுது பார்ப்பவர்கள் உள்ளிட்ட 71 பேர் கொண்ட குழுவினர் யாழ்ப்பாணம், காரைநகருக்கு சென்று குறித்த படகுகளைப் பெற்றுக்கொண்டனர்.

மேலும், இலங்கையிலுள்ள திருகோணமலை, கிரான்ஞ்சி, யாழ்ப்பாணம், காரைநகர் உள்ளிட்ட பகுதிகளில் விடுவிக்கப்பட்டுள்ள 36 படகுகளை பெற்றுக்கொள்வதற்கும் மீட்புக்குழுவினர் நான்கு கட்டமாக இலங்கைக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2014 ஜூன் முதல் 2018 ஓகஸ்ட் மாதம் வரையிலான நான்கு ஆண்டுகளில் இராமநாதபுரம், புதுக்கோட்டை, தூத்துக்குடி, நாகை, தஞ்சை மற்றும் காரைக்கால் பகுதிகளைச் சேர்ந்த 183 படகுகள் இலங்கை கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டன.

பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை விடுவிக்க தமிழகத்தில் மீனவ அமைப்புகள் பல்வேறு போராட்டங்களை நடத்திவந்த நிலையில், இந்திய வெளியுறவுத்துறைஅமைச்சகத்தின் கோரிக்கையையேற்று இலங்கை அரசாங்கம் படகுகளை விடுவிக்க நீதிமன்றங்களுக்கு பரிந்துரை செய்தது.

இதனைத் தொடர்ந்து கடந்த 2018 ஒக்டோபர் இறுதியில் இந்தியப் படகுகளை விடுவிக்க நீதிமன்றங்கள் உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net