அடுத்திருக்கும் மாகாணங்களை இணைக்கலாம் என்பதன் இராஜதந்திர இலக்கு என்ன?
புதிய அரசியல் யாப்பு உருவாக்கம் சாத்தியமில்லை என்பது ஒருபுறம் உண்மையானாலும் மறுபுறம் இந்த புதிய அரசியல் யாப்பு உருவாக்கத்தின் போது அடுத்திருக்கும் மாகாணங்கள் இணையலாம் என்ற பொத்தாம் பொதுவான ஏற்பாட்டை பற்றி ஆழமாக சிந்திக்க வேண்டியதும் அவசியம்.
வடக்கு-கிழக்கு மாகாணங்கள் இணையலாம் என்ற ஏற்பாட்டை செய்யாமல் பொத்தாம் பொதுவாக அடுத்து இருக்கும் மாகாணங்கள் இணையலாம் என்ற ஏற்பாட்டை பற்றி சிந்திப்பது தமிழ் மக்களுக்கு மிகவும் ஆபத்தானது.
எப்போதும் ஓர் அரசியல் நகர்வை அதற்கு இருக்கக்கூடிய இராஜதந்திர இலக்குக்களினால் புரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.
வெளிப்படையாக எழுதப்பட்டிருக்கும் சட்ட வார்த்தைகளுக்கு அப்பால் அந்த சட்டத்தின் மூலம் நிறைவேற்றவல்ல இராஜதந்திர இலக்கையும், அந்த சட்டத்தின் அடிப்படையில் நகர்த்தக்கூடிய நடைமுறை சார்ந்த விடயங்களுக்கு இருக்கக்கூடிய சாத்தியமான பரப்பையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
இலங்கை-இந்திய ஒப்பந்தத்தின் கீழான அரசியல் தீர்வை மாகாண அடிப்படையில் வரையறுத்து பின்பு தமிழரை ஏமாற்றுவதற்காக வடக்கு-கிழக்கு தற்காலிக இணைப்பு என்ற ஓர் ஏற்பாட்டின் கீழ் அதனை வடிவமைத்து இறுதியாக அதனை தமது நடைமுறை வித்தையினால் இரண்டாகப் பிரிக்க முடிந்த இராஜதந்திர இலக்கை ஒரு சிறந்த படிப்பினையாக தமிழ் மக்கள் கொள்ள வேண்டும்.
இதுவிடயத்தில் இந்தியாவையும் தமது இராஜதந்திர வியூகத்தால் ஏமாற்றுவதில் சிங்களத் தலைவர்களும், இராஜதந்திரிகளும் வெற்றி பெற்றார்கள். இதுவிடயத்தில் தோல்வியடைந்தது தமிழர்கள் மட்டுமல்ல இந்தியாவும்தான்.
தமிழ் மக்களுக்கு இருக்கக்கூடிய வடக்கு-கிழக்கு இணைந்த தாயகம் என்ற கொள்கையை அடிப்படையில் இல்லாமல் செய்வதே மாகாணசபைத் தீர்வு என்பதன் வியூகமாக அமைந்தது.
இங்கு தமிழரின் பிரச்சினை தாயகம் பற்றியதாகும். ஆனால் மாகாணசபை என்ற ஏற்பாட்டின் மூலம் தாயகம் என்ற அடிப்படையை இரண்டாகப் பிளக்கும் மூலோபாயத்தில் ஜெவர்த்தன வெற்றி பெற்றார்.
தற்போது உத்தேசிக்கப்படும் புதிய யாப்பில் அடுத்து இருக்கும் மாகாணங்கள் இணையலாம்’ என்பது ஒரு சாதனை போல தமிழ்த் தரப்பால் பேசப்படுகிறது. இது சாதனையல்ல. அழிவை உறுதிப்படுத்தவல்ல ஓர் இராஜதந்திர ஏற்பாடாகும்.
அதாவது கிழக்கு மாகாணம் அதனைச் சூழ நான்கு மாகாணங்களோடு அடுத்து இருக்கிறது. தென் மாகாணம், மத்திய மாகாணம், வடமத்திய மாகாணம் என்ற மூன்று சிங்கள மாகாணங்களுடன் எல்லையைக் கொண்டுள்ளது. அத்துடன் தமிழ்ப் பகுதியாகிய வடமாகாணத்துடனும் எல்லையைக் கொண்டுள்ளது.
மணலாறு என்னும் தமிழ்ப் பகுதியை திட்டமிட்ட சிங்களக் குடியேற்றத்தின் மூலம் சிங்களப் பகுதியாக்கி அதற்கு வெலிஓயா என்று சிங்களத்தில் பெயர் மாற்றமும் செய்துள்ளார்கள்.
இந்த வெலிஓயாவை முல்லைத் தீவு மாவட்டத் தென்பகுதிக் கடலோரம் வரை நீட்டி வடமத்திய மாகாணத்தோடு இணைத்துவிட்டால் வடக்கும், கிழக்கும் பௌதீக ரீதியாகத் துண்டாடப்பட்டு அடுத்து இருக்கும் மாகாணங்கள் என்ற தன்மையை இழந்துவிடும்.
இந்த நல்லாட்சி அரசாங்கத்தின் கீழும் மகாவலி அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் சிங்களக் குடியேற்றங்கள் முல்லைத் தீவு கடலோரத்தை நோக்கி விரிவுபடுத்தும் திட்டம் தற்போது சர்ச்சைக்குரியதாக தமிழ் மக்களால் எதிர்நோக்கப்படுகிறது.
இப்படியொரு குடியேற்ற நடவடிக்கை நடைபெறுவது தனக்குத் தெரியாது என்று ஜனாதிபதி கூறியிருப்பது அவரது பொறுப்பற்ற செயலைக் காட்டும் விடயமல்ல. மாறாக அவர்களின் இறுதி நோக்கத்தை நிறைவேற்றுவதற்கான திட்டத்தின் ஒரு பகுதியே அதுவாகும்.
இதுவிடயத்தில் சிங்கள ஆட்சியாளர்கள் எக்கட்சிகளைச் சேர்ந்தவர்களாயினும் ஒரே மாதிரி விடாப்பிடியாக செயற்பட்டு வருவதை நடப்பு அரசியல் வரலாறு நிரூபித்து வருகிறது.
எனவே சிங்களக் குடியேற்றங்களின் மூலமும் மற்றும் நிர்வாக ஏற்பாடுகளின் மூலமும் வடக்கையும்-கிழக்கையும் நிலத் தொடர்பற்ற தமிழர் பகுதியாக்கும் திட்டம் ஒரு முழுநீள நோக்கோடு செயற்படுத்தப்பட்டு வருகிறது.
ஆதலால் தமிழ்த் தலைவர்களை சிறுபிள்ளைத்தனமாக அவ்வப்போது ஏமாற்றுவதன் மூலம் இதல் இறுதி வெற்றி அடைந்திடலாம் என்பது சிங்களத் தலைவர்களின் ஒரு வியூகமாகும்.
மறுபுறம் கிழக்கு மாகாணத்தை சிங்களப் பகுதியோடு இணைப்பது இன்னொரு திட்டமாகும். ஒருவகையில் திருகோணமலை மாவட்டத்திலுள்ள சிங்களக் குடியேற்றப் பகுதிகளை நிர்வாக ரீதியாக வடமத்திய மாகாணத்துடன் இணைத்திட முடியும்.
அதாவது வடமாகாணத்தின் தென்கிழக்குப் பகுதியை வடமத்திய மாகாணத்துடன் இணைக்க முடியும். அதேபோல கிழக்கு மாகாணத்தின் வடபகுதியையும் வடமத்திய மாகாணத்துடன் இணைக்க முடியும்.
இறுதியில் வடக்கில் இருந்து கிழக்கை பிரிப்பதில் அடையும் வெற்றியோடு கிழக்குவாழ் தமிழரைத் தனிமைப்படுத்தி கிழக்கு மாகாணத்தை அடுத்திருக்கும் மாகாணங்களான வடமத்திய மாகாணம் அல்லது தென்மாகாணம் அல்லது மத்திய மாகாணம் என்பனவற்றுடன் எதிர்காலத்தில் அரசியல் ரீதியாக இணைத்திட முடியும். இதற்கு கிழக்கு மாகாணத்தில் இரண்டு ஏதுக்கள் உண்டு என சிங்களத் தலைவர்கள் நம்புகின்றனர்.
முதலாவதாக சுதந்திரமடைந்த காலத்தில் ஒரு வீத சிங்கள குடிப்பரம்பலைக் கொண்டிருந்த கிழக்கு மாகாணம் இன்று சுமாராக மூன்றில் ஒரு பங்கு குடிப்பரம்பலை சிங்களக் குடியேற்றத்தின் வாயிலாக அடைந்திருக்கிறது.
அத்துடன் தமிழ் மக்களின் சனத்தொகை யுத்த நெருக்கடி இடப்பெயர்வுகளாலும் யுத்தகால உயிர் இழப்புக்களின் மூலம் இயற்கையான சனத்தொகை வளர்ச்சிக்கான வலுவை கிழக்குவாழ் தமிழ் மக்கள் இழந்தனர்.
குறிப்பாக சனத்தொகைப் பெருக்கத்திற்கான கருவளம் உள்ள தமிழ் இளைஞர்களும், யுவதிகளும் இங்கு யுத்தத்தில் கொல்லப்பட்டும் கிழக்கிற்கு வெளியே இடம்பெயர்ந்தும் போன நிலையில் இயல்பான சனத்தொகை வளர்ச்சிக்கான வாய்ப்புக்களையும் கிழக்குவாழ் தமிழ் மக்கள் இழந்துள்ளனர்.
அத்துடன் தற்போது கிழக்கில் அரசியல் அதிகாரத்திற்கு வரமுடியாத மக்களாகவும் கிழக்கில் தமது அரசியல் இருப்பையும் இழக்க வேண்டிய அபாயத்தைக் கொண்டவர்களாயும் தமிழர்கள் உள்ளனர்.
அதிகாரத்தில் இருக்கவல்ல சிங்கள ஆட்சியாளர்களால் கிழக்கிலுள்ள தமிழர்களையும், முஸ்லிம்களையும் பிரித்தாளும் தந்திரத்தின் வாயிலாக இலகுவாகக் கையாள முடியும்.
தமிழரை ஒடுக்குவது முதல் நோக்கம் என்ற வகையில் தமிழரையும் முஸ்லிம்களையும் மோதவிடும் வகையில் அரசியல் பொருளாதார இராஜதந்திர நகர்வுகளை சிங்களத் தலைவர்களால் செய்ய முடியும்.
இத்தகைய பகைமைகளின் வளர்ச்சியின் பின்னணியில் நடத்தக்கூடிய ஒரு பொதுவாக்கெடுப்பின் போது கிழக்கு மாகாண முஸ்லிம்களை தமிழருக்கு எதிரான வகையில் பகைமைக்கு உள்ளாக்கி அதில் பெறும் வாக்கின் மூலம் ஒரு சிங்கள மாகாணத்துடன் கிழக்கை இணைக்கும் நடவடிக்கையில் சிங்களத் தலைவர்கள் வெற்றிபெற முடியும்.
இப்போது கிழக்கு மாகாணத்தில் காணப்படும் தமிழ்-முஸ்லிம் முரண்பாடு மற்றும் ஆட்சியாளர்களின் அரசியல் சித்துவிளையாட்டுக்கள் போன்றவை இத்தகைய போக்கை வளர்த்தெடுக்கும் என்பதற்கான கட்டியங்களாக உள்ளன.
சிங்கள-பௌத்தர்களின் அகராதியில் தமிழர்களைவிடவும் முஸ்லிம்களையே அவர்கள் தமக்கு அதிகம் பிரச்சினையாகக் கருதுகின்றனர். ஆனால் தற்போதைய நிலையில் பிரிந்து செல்லக்கூடிய தமிழரை அதற்கான அடிப்படையற்றவர்களாக ஆக்குவதற்கு தற்காலிகமாக முஸ்லிம்களை அணைக்க வேண்டும் என்று கருதுகின்றனர்.
தமிழர்கள் இவ்வாறு வீழ்த்தப்படும் மறுகணத்தில் அவர்களின் கத்தி இலகுவாக முஸ்லிம்களை நோக்கிப் பாயும் என்பதை வரலாற்றுப் போக்கு நிரூபித்து நிற்கின்றது என்பது வேறுகதை.
ஆனால் அரச பதவியில் இருக்கும் சிங்களத் தலைவர்களால் அதற்குரிய அரச வளங்கள் அனைத்தையும் பயன்படுத்தி தற்போது முதல்கட்டமாக தமிழரையும் அதன் தொடர்ச்சியாக முஸ்லிம்களையும் அழிக்கும் திட்டத்தில் நீண்ட நோக்குப் பார்வையுடன் சிங்களத் தலைவர்கள் செயற்படுகின்றனர்.
அந்தவகையில் அடுத்திருக்கும் மாகாணங்கள் இணையலாம் என்பதன் பின்னால் தமிழர்களினதும், முஸ்லிம்களினதும் அழிவும் இராஜதந்திர ரீதியில் புதைந்து கிடக்கிறது.
அதிகாரத்தில் இருக்கக்கூடிய சிங்களத் தலைவர்களால் எந்தொரு இனத்தைச் சேர்ந்த தலைவர்களையும் தம் சட்டைப் பைக்குள் தூக்கி வைத்திட முடியும்.
தற்போதைய தமிழ்த் தலைவர்களை சிங்களத் தலைவர்கள் ஒரு கணம் தோளில் தூக்கினாலும் மறுகணம் தரையில் போட்டு மிதித்திடுவார்கள் என்பதை அண்மைக்கால நடைமுறைகள் நிரூபித்துள்ளன.
எதிர்கட்சித் தலைவராக ஒரு தமிழரை தம் தேவைக்காக ஒரு காட்சிப் பொருளாய் தலையில் தூக்கி வைத்துவிட்டு இப்போது அவரை உதைத்து தரையில் சரித்துள்ளார்கள். இதுவே எப்போதுக்குமான உண்மையாகும்.
இதுவிடயத்தில் சிங்களக் கட்சிகள் அனைத்தும் ஒருவிதமான இலக்கையே கொண்டுள்ளன. எந்த ஐதேகவினரை பதவியில் அமர்த்துவதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நீதிமன்றம் வரை சென்றதோ அந்த ஐதே கட்சியும் திரு.சம்பந்தனின் வீழ்ச்சியை ஏற்று ஆதரிக்கும் நிலையிலேயே உள்ளது.
மகிந்த ராஜபக்ஷ தாமரை மொட்டைச் சின்னமாகக் கொண்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் ஓர் உறுப்பினராகச் சேர்ந்தமை இணைய தளங்களிலும், பத்திரிகைகளிலும் காட்சிபடுத்தப்பட்டுள்ளது.
இதனை தமது டுவிட்டர் இணையதளத்தில் மகிந்த ராஜபக்ஷ குடும்பம் அங்கத்துவ அட்டையை பெறும் படத்துடன் பதிவு செய்து அதனைப் பெருமையாகவும் பேசிவந்தது.
வேறு ஒரு கட்சியில் உறுப்பினராக இருந்து கொண்டு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் மகிந்த ராஜபக்ஷ எதிர்க்கட்சித் தலைவராக வரமுடியாது.
இதுவிடயத்தை ஒரு பிரதான அரசியல் சட்ட மீறலாக ஐக்கிய தேசியக் கட்சியோ, ஜேவிபியினரோ முன்னிறுத்தவில்லை என்பது இங்கு பெரிதும் கருத்தில் கொள்ளத்தக்கது.
தமிழ்த் தலைவர்களின் சிறுபிள்ளைத்தனமான அரசியலை இலகுவாக கையாளக்கூடிய வித்தை சிங்களத் தலைவர்களுக்குத் தெரியும்.
எப்போதும் அதிகாரத்தில் இருக்கக்கூடிய சிங்களத் தலைவர்களால் எந்த இனத்தைச் சேர்ந்த தலைவர்களையும் தமக்கு இருக்கக்கூடிய வாய்ப்புக்களைப் பயன்படுத்தி இலகுவாக கையாண்டுவிடுவார்கள் என்பதை கருத்தில் எடுக்கத் தவறக்கூடாது.
எப்படியாயினும் அவ்வப்போதைய நிலைமைகளைக் கையாண்டு நீண்ட நோக்கில் தமது இலக்கை சிங்களத் தலைவர்கள் அடைந்திடுவார்கள்.
-எழுத்தாளர் M.Thirunavukkarasu-