நியூசிலாந்து அணியை இலகுவாக வீழ்த்தியது இந்தியா

நியூசிலாந்து அணியை இலகுவாக வீழ்த்தியது இந்தியா

அவுஸ்திரேலிய தொடரை வெற்றிகரமாக நிறைவு செய்துவிட்டு அதே உத்வேகத்துடன் ஐந்து ஒருநாள் சர்வதேச போட்டிகள் மற்றும் மூன்று டி20 சர்வதேச போட்டிகளில் விளையாடுவதற்காக நியுசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி மற்றும் நியூசிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் சர்வதேச போட்டி இன்று (23) நியூசிலாந்தின் நேபியர் நகரில் நடைபெற்றது.

இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி சகல விக்கெட்டுகளையும் இழந்து 157 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.

அவ்வணி சார்பாக அதிக பட்சமாக அணித்தலைவர் கேன் வில்லியம்சன் அரைச்சதம் கடந்து 64 ஓட்டங்கள் பெற்றிருந்ததைத் தவிர ஏனைய வீரர்கள் அனைவரும் குறைந்த ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர்.

இந்திய அணியின் பந்து வீச்சில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளையும் மொஹமட் ஷமி 3 மற்றும் சஹால் 2 விக்கெட்டுகள் என கைப்பற்றியிருந்தனர்.

இன்றைய போட்டியில் முதலாவது விக்கெட்டுக்காக மார்டின் கப்டிலின் விக்கெட்டை பதம் பார்த்த மொஹமட் ஷமி, ஒருநாள் சர்வதேச போட்டிகளில் தனது 100ஆவது விக்கெட் எனும் மைல்கல்லை எட்டியிருந்தார்.

அதுமாத்திரம் இன்றி வேகமாக 100 விக்கெட்டுகள் கைப்பற்றிய இந்திய பந்து வீச்சாளர் என்ற சாதனையையும் அவர் தனதாக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பின்னர், இலகுவான வெற்றியிலக்கான 158 ஓட்டங்களை பெறுவதற்காக பதிலுக்கு துடுப்பெடுத்தாட களமிறங்கிய இந்திய அணிக்கு போட்டியின் இடைவேளையின் பின்னர் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக டக்வேர்த் லுயிஸ் முறைப்படி வெற்றியிலக்கு 49 ஓவர்களில் 156 ஓட்டங்களாக குறைக்கப்பட்டது.

இந்திய அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் ஷிகர் தவான் மற்றும் அணித்தலைவர் கோஹ்லி ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தின் மூலம் அவ்வணி 34.5 ஓவர்களில் இரண்டு விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை அடைந்து 8 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது. துடுப்பாட்டத்தில் தவான் ஆட்டமிழக்காமல் 75 ஓட்டங்களையும் கோஹ்லி 45 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

இதனால், இந்திய அணி ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலை பெற்றது.

இன்றைய போட்டியின் ஆட்ட நாயகன் விருது மொஹமட் ஷமிக்கு வழங்கப்பட்டது.

நியூசிலாந்து அணி – 157 (38) – வில்லியம்சன் 64, குல்தீப் யாதவ் 39/4, மொஹமட் ஷமி 19/3, சஹால் 43/2

இந்திய அணி – 156/2 (34.5) – தவான் 75*, கோஹ்லி 45, பிரேஸ்வல் 23/1

முடிவு : இந்திய அணி 8 விக்கெட்டுகளால் வெற்றி.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net