ஜனாதிபதியின் பேராசையினாலேயே மஹிந்தவை பிரதமராக்கினார்!

ஜனாதிபதியின் பேராசையினாலேயே மஹிந்தவை பிரதமராக்கினார்!

துமிந்த சில்வாவுக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்க ஜனாதிபதியின் அனுமதியுடன் கொழும்பு மாவட்டத்தில் கையெழுத்து சேர்க்கப்பட்டு வருகின்றது.

ஜனாதிபதியின் இந்த நடவடிக்கை போதையை ஒழிக்கும் அவரது கொள்கைக்கு முரணானதாகும் என ஐக்கிய தேசிய முன்னணி உறுப்பினர் ஹிருனிகா பிரேமசந்திர தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற விசாரணை ஆணைக்குழுக்கள் (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில்,

கொலை குற்றத்துக்காக மரண தண்டனை விதிக்கப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டுள்ள துமிந்த சில்வாவுக்கு எதிர்வரும் சுதந்திர தினத்தில் ஜனாதிபதி மன்னிப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

அதற்காக ஜனாதிபதியின் அறிவுறுத்தலுடன் கொலண்ணாவை உட்பட கொழும்பு மாவட்டத்தின் மக்களிடம் கையெழுத்து சேர்க்கப்பட்டு வருவதாக சமூக வலைத்தலங்களில் பிரசுரமாகி இருக்கின்றது. இது தொடர்பான சாட்சிகளும் என்னிடம் இருக்கின்றன.

அத்துடன் துமிந்த சில்வாவுக்கு பொது மன்னிப்பு வழங்குவதில் எனக்கு தனிப்பட்ட பிரச்சினை எதுவும் இல்லை. அவர் எனது தந்தையை கொலை செய்தார் என்பது உறுதிப்படுத்தப்பட்டு அவருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டிருக்கின்றது.

எனது போராட்டமும் அதுவாகவே இருந்து. அவருக்கு தீர்ப்பு வழங்கப்பட்டதுடன் நாட்டில் நீதிமன்ற சுயாதீனம் உறுதிப்படுத்தப்பட்டது. அதன் பின்னர் எனது கடமை முடிந்தது.

ஆனால் நாட்டில் போதைப்பொருள் கடத்தலில் பிரதானமாக இருக்கும் துமிந்த சில்வா போன்றவர்களுக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கப்பட்டால் எதிர்காலத்தில் சிறைச்சாலைகளில் இருக்கும் ஏனைய கைதிகளுக்கும் பொது மன்னிப்பு வழங்குமாறு கோரிக்கை முன்வைக்கப்படும்.

இது எதிர்காலத்தில் பாரிய பிரச்சினையை ஏற்படுத்தும். ஜனாதிபதி தனக்கிருக்கும் அதிகாரத்தை தனது சுயநலனுக்காக பயன்படுத்தக்கூடாது.

மேலும் ஜனாதிபதி மீது எங்களுக்கு நம்பிக்கை இருந்தமையாலே அவரை ஜனாதிபதியாக்க நாங்கள் அர்ப்பணிப்புடன் செயற்பட்டோம். ஆனால் அவர் கடந்த ஒக்டோபர் 26ஆம் திகதி மேற்கொண்ட அரசியல் சூழ்ச்சிக்கு பின்னர் அவர் மீது எந்த நம்பிக்கையும் இல்லை.

அரசியலமைப்புக்கு எதிராக செயற்பட்ட ஜனாதிபதி, துமிந்த சில்வாவுக்கு மன்னிப்பளிக்க நடவடிக்கை எடுக்கமாட்டார் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.

நாட்டில் போதைகொருளை ஒழிக்க எந்த தீர்மானத்தையும் மேற்கொள்ள பின்வாங்கப்போவதில்லை என தெரிவிக்கும் ஜனாதிபதி தற்போது அவரது கொகைக்கு முரணாக செயற்பட்டு வருகின்றார்.

அத்துடன் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு மீண்டும் ஜனாதிபதியாகவேண்டும் என்ற பேராசையிலே அவர் தற்போது அவரது கொள்கைக்கு முரணாக செயற்பட்டு வருகின்றார்.

அதனால்தான் தனது எதிரியாக தெரிவித்து வந்த மஹிந்த ராஜபக்ஷ்வை பிரதமராக்கினார் என்றார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net