பிரியங்கர பெர்னான்டோவை கைது செய்வதற்கு அரசாங்கமே உதவுகின்றது!
பிரிகேடியர் பிரியங்கர பெர்னான்டோவை கைது செய்ய இலங்கை அரசாங்கமே திட்டம் வழிவகுத்துக் கொடுத்துள்ளதாக மஹிந்த ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினரான விமல் வீரவன்ஸ தெரிவித்துள்ளார்.
கொழும்பில் (புதன்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“பிரிகேடியர் பிரியங்கர பெர்னான்டோவை கைது செய்ய பிரித்தானிய நீதிமன்றில் பிடியாணை உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதுதொடர்பில், வெளிவிவகார அமைச்சு இது தொடர்பில் எவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது என எமக்கு இதுவரை தெரியாது.
ஆனால், வரலாற்றில் இதற்கு முன்னர் எப்போதும், இலங்கை இராணுவத்தினரை கைது செய்யுமாறு வெளிநாட்டு நீதிமன்றமொன்றில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டதில்லை. அவ்வாறு நாம் கேள்விப்பட்டதுமில்லை. இதுதான் முதன்முறையாகும்.
இலங்கைக்கு எதிரான தீர்மானத்துக்கு அரசாங்கமே அங்கீகாரம் வழங்கியுள்ளது. அதேபோல், காணாமற்போனோர் தொடர்பிலான சட்டமூலமும் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதனால், சர்வதேச நாடு ஒன்றிலிருந்து இராணுவத்தினருக்கு எதிரான பிடியாணை பிறப்பிக்கும்போது, குறித்த நபரை அந்நாட்டுக்கு ஒப்படைப்பதற்கான வழிவகைகளும் திறந்து தான் காணப்படுகின்றன.
அதற்கிணங்க, பிரித்தானிய நீதிமன்றம் பிரிகேடியருக்கு எதிராக பிடியாணை பிறப்பித்துள்ளது.
அரசாங்கமோ, சர்வதேசத்திடம் இராணுவத்தினரை விட்டுக்கொடுக்க மாட்டோம் எனக் கூறிக்கொண்டிருந்தாலும், அரசாங்கத்தின் கடந்த கால செயற்பாடுகளால், நீதிமன்ற உத்தரவுக்கு கட்டுப்பட வேண்டிய நிலைமை தற்போது ஏற்பட்டுள்ளது.
இதுதொடர்பில் நாம் அன்று கூறியபோது, அனைவரும் எம்மை பார்த்து சிரித்தார்கள். அவ்வாறு இடம்பெறாது என்றுக் கூறினார்கள்.
இப்போது, பிரித்தானிய நாடாளுமன்றம் இலங்கை இராணுவத்தினருக்கு பிடியாணை பிறப்பித்துள்ளது. இப்படியான ஒரு அரசாங்கத்துக்கு இனியும் ஆட்சி பீடத்தில் நீடித்திருக்க நாம் இடமளிக்கக்கூடாது” என விமல் வீரவன்ஸ மேலும் தெரிவித்தார்.