மாகாண சபைத் தேர்தலை துரிதமாக நடத்தவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது!
மாகாண சபைத் தேர்தலை துரிதமாக நடத்த வேண்டியத் தேவை ஏற்பட்டுள்ளதாக எதிரணி நாடாளுமன்ற உறுப்பினரும் ஈ.பி.டி.பி. கட்சியின் செயலாளர் நாயகமுமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
மாகாண சபை முறைமையை எமது மக்கள் நலன் கருதிய முறைமையாக செயற்படுத்த வேண்டும் என்கின்ற விருப்பமும் தேவையும் மக்களுக்கு இருக்கின்றதெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
“மக்களை மறந்தவிட்டு வெறும் பதவிகளுக்காகவும் சலுகைகளுக்காகவும் மாகாண சபையை ஆண்டகாலம் மலையேறிவிட்டது.
இனி மக்களுக்காக வடக்கு கிழக்கு மாகாணசபை இயங்கவேண்டும். எமது மக்கள் விரும்புகின்ற பிரதிநிதிகளால் அது இயங்க வேண்டும்.
தற்போது நாட்டில் சப்ரகமுவ மாகாணம், வட மத்திய மற்றும் கிழக்கு ஆகிய 3 மாகாணங்களின் தேர்தலை நடத்தாமல் ஒன்றரை வருடம் கடந்துள்ளது.
அதேபோல், வடக்கு, வடமேல் மற்றும் மத்திய மாகாண சபைகளின் ஆட்சிக்காலம் நிறைவடைந்து 3 மாதங்கள் ஆகின்றன. மேல் மாகாணம், ஊவா மற்றும் தென் மாகாணங்களின் ஆட்சிக்காலமும் வெகுவிரைவில் பூர்த்தியடையவுள்ளது.
எனவே மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்தவேண்டிய தேவை தற்போது முக்கியமானதாகக் கருதப்படுகின்றது” என்று அவர் தெரிவித்தார்.