இலஞ்சம் வாங்கும் தலைவர்கள் மக்கள் பிரதிநிதிகளாக இருக்க முடியாது!
இலஞ்ச ஊழலில் ஈடுபடும் அரசியல் தலைவர்கள் மக்கள் பிரதிநிதிகளாக நிலைக்க முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவளையாறு கைலன் வித்தியாலய வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டியின் இறுதிநாள் நிகழ்வு நேற்று (ஞாயற்றுக்கிழமை) நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“அபிவிருத்திக்காக கிடைக்கும் பணத்தினை உடனுக்குடன் செலவு செய்வது மிகவும் அவசியமாகும். மக்களுக்காக கிடைக்கும் பணத்தினை விரயம் செய்வது மற்றும் அபிவிருத்திக்குப் பயன்படுத்தாது மீண்டும் திருப்பி அனுப்புவது எமது மக்களுக்குச் செய்யும் துரோகமாகும்.
மக்களுக்காக வந்த கம்பெரலிய திட்ட பணத்தில் அபிவிருத்தி செய்யாமல் குறித்த பணத்தினைத் தமது தேவைகளுக்குப் பயன்படுத்துவதை ஏற்றுக் கொள்ள முடியாது.
நாம் எங்களுக்கு வந்த பணத்தை சரியான முறையில் மக்களுக்காக பயன்படுத்தியுள்ளோம். நாங்கள் எந்த ஒப்பந்தகாரரிடமும் இலஞ்சம் வாங்கவில்லை” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.