மஹிந்தவின் அரசியல் பயணம் முடிவுக்கு வரும்!

மஹிந்தவின் அரசியல் பயணம் முடிவுக்கு வரும்!

ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ச போட்டியிட்டால் மஹிந்த ராஜபக்சவின் அரசியல் பயணம் முடிவுக்கு வந்துவிடும் என நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பாக ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள அவர்,

“தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் இனிமேல் ஜனாதிபதியாக வருவதற்குத் தகுதியற்றவர்.

பொருத்தமான – வெற்றியை உறுதி செய்யக்கூடிய – நாட்டு மக்களின் மனதை வெல்லக்கூடிய ஒருவரை ஜனாதிபதி வேட்பாளராக மஹிந்த ராஜபக்ச களமிறக்க வேண்டும்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக கோட்டாபயவைக் களமிறக்க மஹிந்த முடிவெடுத்துள்ளார் என்று எமக்குத் தகவல் கிடைத்துள்ளது.

உண்மையில் கோட்டாபய களமிறங்கினால் படுதோல்வியைச் சந்திப்பார். தமிழ் – முஸ்லிம் மக்கள் அவருக்கு வாக்களிக்க மாட்டார்கள். சிங்கள மக்களிலும் 60 வீதமானோர் அவரை எதிர்ப்பார்கள்.

எனவே, மஹிந்த தனது முடிவை மாற்றியமைக்க வேண்டும். இல்லையேல் மஹிந்தவின் அரசியல் பயணம் முடிவுக்கு வந்துவிடும்.

ராஜபக்ச குடும்பத்தில் மஹிந்தவே நல்லவர் நேர்மையானவர். ஏனையவர்கள் ஊழல், மோசடிகள் மற்றும் கொலைகளுடன் தொடர்புடையவர்கள். இப்படியானவர்கள் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டால் முழு நாடும் கொதிப்படையும்.

மஹிந்தவின் நல்ல குணத்துக்கு அவர்தான் மீண்டும் ஜனாதிபதியாக வரவேண்டும் ஆனால், நாட்டின் தற்போதைய அரசமைப்பின் பிரகாரம் அவர் மீண்டும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியாது.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சகல பங்காளிக் கட்சிகளும் ஒன்றுகூடி பொருத்தமான ஜனாதிபதி வேட்பாளரைத் தெரிவுசெய்ய வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net