3 வயது சிறுவனை 2 நாட்கள் காட்டில் பாதுகாத்த அதிசயக் கரடி!

3 வயது சிறுவனை 2 நாட்கள் காட்டில் பாதுகாத்த அதிசயக் கரடி!

வழிதவறி காட்டுக்குள் சென்ற 3 சிறுவனை 2 நாட்களாக கரடி ஒன்று பாதுகாத்த அதிசய சம்பவம் அமெரிக்காவில் நிகழ்ந்துள்ளது.

வட கரோலினாவை சேர்ந்த 3 வயதுடைய சிறுவன் கேஸே ஹதாவே. குறித்த சிறுவன் கடந்த வாரம் செவ்வாய்க்கிழமையன்று தனது பாட்டி வீட்டிற்கு சென்றிருந்தான்.

அங்கு வந்த ஏனைய சிறுவர்களுடன் கேஸே ஹதாவே விளையாட்டில் ஈடுபட்டுள்ளான். விளையாடி முடித்துவிட்டு மற்ற குழந்தைகள் வீட்டுக்குச் சென்ற நிலையில் கேஹே ஹதாவே மட்டும் வூட்ஸ்காட்டுப் பகுதிக்குள் வழிதவறிச் சென்றுவிட்டான்.

இந்நிலையில், தமது மகன் நீண்டநேரம் ஆகியும் வீட்டுக்கு வராததை அறிந்த அவனின் பெற்றோர் சிறுவனை தேட தொடங்கினார்கள்.

சிறுவனை பெற்றோரால் கண்டறிய முடியவில்லை. இதனால் பொலிஸ், தன்னார்வ அமைப்புகளுக்குத் தகவல் அளித்து கேஸே ஹதாவேவை தேடும் பணியைத் தீவிரப்படுத்தினார்கள்.

இதனிடையே வட கரோலினா வனப் பகுதியில், கறுப்புநிறக் கரடிகள் அதிக அளவில் வாழ்கின்றன. இந்தக் கரடிகளால் சிறுவன் ஹதாவே தாக்கப்படலாம் என்ற அச்சம் பெற்றோரையும் அங்கிருக்கும் மக்களையும் மிகவும் பயப்படவைத்துள்ளது.

மேலும், அங்கு தற்போதைய நிலவரப்படி இரவுநேரத்தில் மைனஸ் 3 டிகிரியாக குளிர் நிலவுகின்றது. சிறுவன் காணாமல் போனபோது குளிரைத் தாக்கும் உடையையும் சிறுவன் ஹதாவே அணியவில்லை என்பதால், பெற்றோர் மிகுந்த பதற்றமடைந்தனர்.

சுமார் இரண்டு நாட்கள் ஹெலிகாப்டர், ட்ரோன்கள், போலீஸார், தன்னார்வ அமைப்புகள் சேர்ந்து கடும் தேடுதல் நடவடிக்கைளை மேற்கொண்டனர்.

பல்வேறு அபாயகரமான காரணிகள் காணப்படுவதால் சிறுவனின் நிலை தொடர்பில் அனைவருக்கும் மிகுந்த அச்சமே உருவாகியது. இந்த சூழ்நிலையில் அங்கு தொடர்ந்து இரண்டு நாட்கள் மழையும் பெய்ததால், சிறுவன் தொடர்பான கவலை மேலும் அதிகரித்தது.

இந்நிலையில், கடந்த வாரம் வியாழக்கிழமை ஊட்ஸ் காட்டுப்பகுதியில் சிறுவனின் அழுகுரல் சாகசப் பயணம் சென்ற பெண் ஒருவர் காதில் விழுந்துள்ளது.

அழுகுரல் கேட்டு குறித்த பகுதியை நோக்கி விரைந்து சென்ற பெண்ணுக்கு அங்கு கண்ட காட்சி பெரும் அதிர்ச்சியாக இருந்துள்ளது. ஒரு மிகப்பெரிய கரடி, சிறுவனைப் பாதுகாப்பாக வைத்திருப்பதை அந்தப் பெண் பார்த்துள்ளார்.

அப்பெண்ணைப் பார்த்தவுடன் அந்தக் கரடி அங்கிருந்து சென்றும் உள்ளது. உடனே அந்தப் பெண் சிறுவன் ஹதாவேவை அழைத்துக் கொண்டுவந்து கிராவன் கவுண்டி பொலீசில் ஒப்படைத்துள்ளார். சிறுவனை கரடி ஒன்றுமே செய்யாது மிகவும் கவனமாக காத்த சம்பவம் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து கிராவன் கவுண்டி பொலிஸ் அதிகாரி சிப் ஹக்ஸ் தெரிவிக்கையில் வனப் பகுதிக்குள் சிக்கிய சிறுவன் ஹதாவேவை கடந்த 2 நாட்களாக ஒரு கரடி பாதுகாத்துள்ளது. ஒரு பெண் காட்டுக்குள் தனது நாயுடன் சென்றபோது சிறுவனின் அழுகுரல் கேட்டு சிறுவனை மீட் எம்மிடம் ஒப்படைத்துள்ளார்.

சிறுவனை 2 நாட்களாகக் கரடி பாதுகாத்தது வியப்பாக இருக்கிறது தம்மால் நம்பவே முடியவில்லை என்று தெரிவித்துள்ளார்.

சிறுவன் ஹதாவே கிடைத்த மகிழ்ச்சியில் ஹதாவேயின் தாயார் பிரணியா ஃபேஸ்புக்கில் பதிவிடுகையில், எனது மகனை ஒரு பெரிய கரடி ஒன்று 2 நாட்களாகக் காட்டில் பாதுகாத்து வைத்துள்ளது. கடவுள்தான் அவனுக்கு ஒரு நண்பனை அனுப்பிப் பாதுகாத்துள்ளார். எப்போதாவது இதுபோல் அதிசயங்கள் நடக்கின்றன எனத் தெரிவித்துள்ளார்.  

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net