ஜனாதிபதியின் விமர்சனங்களால் மனமுடைந்துபோயுள்ளோம்.

ஜனாதிபதியின் விமர்சனங்களால் மனமுடைந்துபோயுள்ளோம்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்வைத்துள்ள விமர்சனங்களால் மனமுடைந்துபோயுள்ளதாக இலங்கையின் மனித உரிமை ஆணைக்குழு தெரிவித்துள்ளது

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சில நாட்களிற்கு முன்வைத்துள்ள கருத்துக்கள் குறித்து அவரிற்கு எழுதியுள்ள கடிதத்தில் மனித உரிமை ஆணைக்குழுவின் தலைவரான கலாநிதி தீபிக உடகம இதனை தெரிவித்துள்ளார்.

அநீதியான விமர்சனங்கள் காரணமாக நாங்கள் மனமுடைந்து போயுள்ளதுடன் உற்சாகமிழந்துள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார்

ஜனாதிபதி சிறைச்சாலையில் கைதிகள் தாக்கப்பட்ட விடயத்தில் மனித உரிமை ஆணைக்குழுவின் தலையீடு குறித்து கருத்து தெரிவித்துள்ளதை தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ள தீபிக உடகம சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் நலன்களை கண்காணிப்பதும் உரிமைகளை உறுதி செய்வதும் மனித உரிமை ஆணையகத்தின் பணிகளில் ஒன்று என தெரிவித்துள்ளார்

கைதிகள் உரிமைகள் மற்றும் அவர்களிற்கான தண்டனைகள் குறித்து மனித உரிமை ஆணையம் தகவல்களை முன்வைப்பதை குற்றவாளிகளை பாதுகாக்க முயல்வதாக அர்த்தப்படுத்துவது தவறானது என அவர் குறிப்பிட்டுள்ளார்

இலங்கை சிறைகளில் விசேட அதிரடிப்படையினர் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமை குறித்து தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களும் அவர்களது குடும்பத்தவர்களும் கவலை வெளியிட்டுள்ளனர்.

இதன் காரணமாக ஆணைக்குழு விசேட அதிரடிப்படையின் கட்டளை அதிகாரிக்கு கடிதமொன்றை அனுப்பியது அவர் அதற்கு பதில் அளித்துள்ளார் என தீபிக உடகம குறிப்பிட்டுள்ளார்

கைதிகளும் மனிதர்களே என்பதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்

இதேவேளை மாலியில் உள்ள இலங்கையின் அமைதிகாக்கும் படையினரை மீள அழைப்பது மனித உரிமை ஆணையத்தின் நடவடிக்கைகளால் தாமதமானது என ஜனாதிபதி தெரிவித்திருப்பது தவறானது எனவும் தீபிக உடகம தெரிவித்துள்ளார்.

மாலியில் இலங்கை படையினர் கொல்லப்பட்டமைக்கு இலங்கை மனித உரிமை ஆணையகத்தின் மீது பழியை போடுவது கடும் கரிசனத்தையும் வேதனையும் அளித்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்

எங்களது சுதந்திர தன்மை காரணமாகவும் எங்கள் மீதான நம்பிக்கை காரணமாகவும் ஐநா அமைதிப்படையில் இடம்பெறும் படையினர் குறித்து விசாரணைகளை மேற்கொள்ளும் பொறுப்பை ஐநா எங்களிடம் வழங்கியது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net