இவள் மீண்டும் வரமாட்டாளா?

இவள் மீண்டும் வரமாட்டாளா?

பழுதடைந்த பண்ணை ஒன்றை திருத்தி அமைக்கும் வேலைகள் மும்முரமாக கப்டன் குவேனியின் தலைமையில் நடந்துகொண்டிருந்தன.

சிறு பற்றைக் காடுகள் மண்டி, சிதைந்துபோய்க் கிடந்த அந்தப் பண்ணையை செழிப்புற வைக்க கடுமையாக உழைத்தார்கள். அந்தக் கிராமத்தில் வறுமைப்பட்டிருந்த ஏராளமானோர் பண்ணையில் வேலைவாய்பைப் பெற்றனர்.

அந்தப் பண்ணையைச் செழிப்பாக்கும் முயற்சியில் இறங்கி தமது உழைப்பை அவர்கள் நல்கத் தொடங்கினர். மிகவும் கஷ்டப்படும் குடும்பத்தின் தலைவனாக ‘ஐயா’ என்று அழைக்கப்படும் ஒருவரும் அவர்களுடன் வேலை செய்தார். அவரது கூலி உழைப்பைக் கொண்டே, வயிற்றுப் பசியைப் போக்கும் நிலையில் அவரது குடும்பம் இருந்தது.

ஆனால், அவரோ தனது உழைப்பின் அரைவாசிப் பங்கை குடிப்பதற்காக செலவழித்துவிடுவார். இதனால் குடும்பத்தின் வறுமை நிலை தொடர்ந்து கொண்டே இருந்தது.

ஒரு மாத காலமாக பண்ணையில் வேலை புரிந்துகொண்டிருந்த காலத்தில் ஒருநாள், குவேனி அந்த ஐயாவின் வீட்டிற்குச் சென்றிருந்தாள்.

வறுமையின் கோலத்தைப் படம் பிடித்துக் காட்டுவதாய் அவ்வீட்டின் நிலைமைகள் இருந்ததைக் கண்ணுற்றாள். பிள்ளைகளின் உருக்குலைந்த கோலமும், கிழிந்த கந்தல் சேலையை உடுத்தியிருந்த அந்தத்தாயும், வீட்டின் ஏழ்மையை நன்கு வெளிப்படுத்தின.

இச்சூழல் அவளை ஒரு தாங்க முடியாத சோகத்தில் ஆழ்த்தியது. குவேனி அந்த ஐயாவை ஏசிக்கொண்டிருந்தாள். தற்செயலாக அவரும் அச்சமயத்தில் வந்து சேர்ந்தார்.

‘‘ஐயா, இனி உங்களிடம் நான் பணம் தரமாட்டன். உங்கட வீட்டிலதான் கொண்டுபோய்க் குடுப்பன். கொஞ்சமாவது யோசிக்கிறீங்களே ஐயா?’’ என்று ஐயாவை ஏதோ உரிமையுடன் ஏசிக்கொண்டாள். மரத்துக்குக் கீழிருந்து ஐயா அழுதுவிட்டார்.

‘‘தனக்குப் பிள்ளை போல புத்தி கூறும் அளவிற்கு அப்பிள்ளையின் உணர்வை தான் எண்ணிப்பார்க்கிறேன்’’ என்று தன்னை குவேனி ஏசியதை, அவளது தோழிக்கு சொல்லி அழுதார் அந்த ஐயா.

கப்டன் குவேனியிடம் அளப்பரிய அன்பும், பெருமதிப்பும் அவருக்கு வளர்ந்தது. குவேனியும் அடிக்கடி அவர்களின் வீட்டிற்கு சென்று வருவாள்.

ஒருநாள், இராணுவமுகாம் ஒன்றை தாக்கி அளிப்பதற்கான போர்க்கால ஆராய்வில் இறங்கியிருந்த கப்டன் குவேனி, தற்செயலாக இராணுவத்தினர் கண்டுகொண்டதும், ஏற்பட்ட சண்டையில் இறந்துபோனாள்.

இந்தச் செய்திகேட்டு அந்த பண்ணையின் வாசலில் கிடந்தது, அந்த ஐயா ‘‘குவேனி, குவேனி’’ என்று ஓலமிட்டு அழுதாராம். தன் பிள்ளையைப் பிரிந்த பன்மடங்கு துயர் அவரை வாட்டியது.

அந்த இனிய போராளி தமது மண்ணில் மீண்டும் பிறக்க மாட்டாளா என்ற ஏக்கம் கவிய அந்த ஐயா பண்ணையைச் சுற்றி வலம் வந்தார்.

அன்றிலிருந்து அவரில் புதிய மாற்றம் ஏற்பட்டது. கடுமையாக உழைத்தார். பண்ணையில் நட்ட பயிர்கள் நாளொரு வண்ணமும் பொழுதொரு மேனியுமாக செழித்து வளரும் காட்சியைக் கண்டு உளமகிழ்ந்தார்.

குவேனியின் பாதம்பட்ட அந்த மண்ணை, காற்று தன் கைகளால் பௌத்திரமாக அள்ளியது. வெம்மை நிறைந்த சூரியக் கதிர்கள் பாலைமரங்களுக்கூடாக தெறித்து, அவர் முகத்திலும் பட்டது.

நன்றி:- எரிமலை இதழ் 10 ஆவணி 1993.

Copyright © 2570 Mukadu · All rights reserved · designed by Speed IT net