தாயின் கருப்பையிலிருந்து குழந்தையை எடுத்து மீண்டும் கருப்பையில் வைத்த வைத்தியர்கள்

தாயின் கருப்பையிலிருந்து குழந்தையை எடுத்து மீண்டும் கருப்பையில் வைத்த வைத்தியர்கள்

குழந்தையை தாயின் கருப்பையிலிருந்து எடுத்து சிகிச்சையின் பின்னர் மீண்டும் கருப்பையில் வைத்துள்ள சம்பவம் இங்கிலாந்தில் இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவம் உலகில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்தில் தாதியாக பணிபுரிந்துவரும் பெத்தான் சிம்சன் (வயது-26) என்பவர், 20 வார கர்ப்பிணியாக இருக்கும் போது, செல்ம்ஸ்போர்ட் பகுதியில் செயற்பட்டு வரும் ப்ரூம்பீல்ட் மருத்துவமனைக்குச் சென்று பரிசோதனை மேற்கொண்டார்.

அப்போது சாதாரணமாக குழந்தைகளுக்கு இருப்பதை விட தலை இருக்கும் நிலை மாறி இருந்தமை கண்டறியப்பட்டது.

பின்னர் மருத்துவர்கள் தாய் மற்றும் குழந்தையை பரிசோதித்த போது, குழந்தையின் முதுகெலும்பு வளர்ச்சியில் குறை இருப்பதை கண்டறிந்துள்ளனர்.

கருவிற்குள் இருக்கும்போதே குழந்தைக்கு சிகிச்சை செய்வது ஆபத்தானது என்றாலும், சிகிச்சை மேற்கொள்ளாவிட்டால் குழந்தை பிறந்த உடனே அது நடக்கும் திறனைப் பாதிக்கும் என்பதை மருத்துவர்கள் பெத்தான் சிம்சனிடம் விளக்கியுள்ளனர்.

இதன்பின்னர் பெத்தான் சிம்சன் மற்றும் அவருடைய கணவர் கியுரோன் ஆகியோர் அறுவைச் சிகிச்சைக்கு சம்மதம் தெரிவித்தனர்.

இதையடுத்து பெல்ஜியத்தில் மட்டுமே நடைமுறையில் உள்ள இந்த அறுவைச் சிகிச்சையானது லண்டன் மருத்துவனையில் மேற்கொள்ளப்பட்டது.

பெல்ஜியம் மருத்துவர்களுடன் இணைந்து லண்டன் மருத்துவர்களும் இதில் ஈடுபட்டனர்.

குழந்தையை பத்திரமாக வெளியில் எடுத்து, அதற்கான சிகிச்சையை மேற்கொண்ட மருத்துவர்கள் பின்னர் மீண்டும் குழந்தையை கர்ப்பப்பையில் வைத்து தைத்தனர்.

இந்த துணிகர அறுவைச் சிகிச்சைக்குத் தயாரான தம்பதியினருக்கு தங்களுடைய நன்றியினை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net