பொன்னம்மான் உட்பட பதினொரு வேங்கைகளின் 32ம் ஆண்டு நினைவு

கைதடியில் காவியமான மூத்த தளபதி பொன்னம்மான் உட்பட பதினொரு வேங்கைகளின் 32ம் ஆண்டு நினைவு இன்று.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் பெரும் ஆலமரம் போல் நிழல் விட்டு விடுதலைக்காக வாழ்ந்தவர் லெப்.கேணல் பொன்னம்மான். 1987ஆம் ஆண்டு பெப்ரவரி 14நாள் யாழ்ப்பாணம் தைடிப்பகுதியில் ஏற்பட்ட தவறுதலான வெடிவிபத்தின் போது லெப்.கேணல் பொன்னம்மான் உட்பட 11போராளிகள் வீரச்சாவடைந்தனர்.

1956ஆம் ஆண்டு டிசம்பர் 23 ஆம் நாள் யாழ்ப்பணம் கலட்டியில் குடும்பத்தில் மூன்றாவது ஆண்மகனாக யோகேந்திரன் குகன் என்ற பெயருடன் உதித்தார். சிறுவயதில் பல நெருக்கடிகளைச் சந்தித்தார். கருவில் இருக்கும் பிள்ளையைக் கூட அழிக்கத் துடிக்கும் இனவாதிகளின் கொடுமைக்குள் இவரது குடும்பமும் மிஞ்சவில்லை.

1958 ஆம் ஆண்டு ஏற்பட்ட இனக்கலவரத்தில் இவரது தந்தை மிகக் கொடுமையாக சிங்கள இனவெறி பிடித்தவர்களால் தாக்கப்பட்டார். அடித்து அவரைக் குற்றுயிராய் போட்டார்கள். தமிழ் மக்கள் தொடர்ந்து சிங்களவர்களால் தாக்கப்பட்டமை பொன்னம்மானைப போராடத்தூண்டியது.

சிங்கள ஆட்சியாளர்களின் தமிழ் மாணவர்கள் மீதான தரப்படுத்தல், அடக்குமுறைகள் மாணவர்களின் கல்வியில் பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தியது. தமிழ் மாணவர்களுக்கான முன்னுரிமைகள் எல்லாம் புறம் தள்ளி விடப்பட்டபோது. ஒவ்வொரு இளம் துடிப்பு மிக்க இளைஞர்களின் வாழ்வும் சீரழியத் தொடங்கியது.

லெப்.கேணல் பொன்னம்மான் அவர்களின் வாழ்வும் விதிவிலக்காக அமைந்து விடவில்லை. எல்லாவற்றிற்கும் ஒரே வழி தமிழ்மக்கள் தங்கள் சொந்த மண்ணில் சுதந்திரமாக வாழவேண்டும். அதற்காகப் போராட வே ண்டும் என்பதை தெளிவாக பொன்னம்மான் புரிந்து கொண்டார்.

கல்வியிலும் சரி விளையாட்டுக்களிலும் சரி மிகவும் துடிப்போடும், எதையும் ஆராய்ந்து பார்க்கும் குணமுள்ள பொன்னம்மான் அரசின் ஒடுக்குமறைக்கு எதிராக அவ்வப்போது எதிர்ப்புக்களை தெரிவித்து வந்தார்.

1978ஆம் ஆண்டு தமிழீழ தேசியத்தலைவரை சந்தித்த பொன்னம்மான் தொடர்ந்து விடுதலைப்போராட்டத்தின் ஆதரவாளராக இருந்து பின்பு முழு நேரப்போராளியாக தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பில் இணைந்து கொண்டார்.

விடுதலைப்புலிகளிடம் ஆயுதப்பற்றாக்குறை இருந்த காலத்தில் வெடிகுண்டுகள் செய்வதில் பெரிதும் உழைத்தவர் பொன்னம்மான். பலவெடிகுண்டுகளை செய்தும், பல கண்ணிவெடிகளைத் தயாரித்தும் எதிரிகளை கலங்கடித்தார்.

தமிழீழ தேசியத்தலைவருடன் இணைந்து எதிரிகளுக்கு எதிரான தாக்குதல்களில் ஈடுபட்டார்.

விடுதலைப் புலிகளின் பெரும் வளர்ச்சிப் போக்கில் வரலாற்று முக்கியத்துவம் மிக்க தாக்குதலாக அமைந்த 1983ஆம் ஆண்டு யூலை 23நாள் திருநெல்வேலியில் நடத்தப்பட்ட சிறிலங்கா இராணுவ ரக் மீதான தாக்குலில் 13சிங்களப் படைகள் கொல்லப்பட்டதிலும்.

காரைநகர் கடற்படைத்தளம் மீதான தாக்குதல்களிலும், பரந்தன் உமையாள்புரத்தில் சிறிலங்கா இராணுவ வாகனம் மீதான கண்ணி வெடித்தாக்குதலிலும் பொன்னம்மான் பங்கு கொண்டார்.

இந்தியா விடுதலைப்புலிகளுக்கு பயிற்சி வழங்கிய காலப்பகுதியில் முதல் அணியின் தலைவராக 100பேருடன் இந்தியாவிற்குச் சென்று பயிற்சிகள் எடுத்தார். இதில் தொடச்சியான முறையில் நடந்த பய்றிசிகளில் இவர் போராளிகளுடன் ஒரு முன்னோடியாக இருந்து போராளிகளுக்கு அரவணைப்பை வழங்கினார், போராளிகள் பிழை செய்தால் அவர்கள் உணரும் வகையில் கண்டித்து வளர்த்தார்.

அவர்களுக்கு போராட்டம் பற்றிய சிந்தனைகளை அவர்களுக்கு ஊட்டினார். இந்தியாவிற்குச் சென்ற அணிகள் வரிசையில் 7ஆவது அணி பெண்களின் முதலாவது அணியாகும். இப்பாசறை 1985ஆம் ஆண்டு காலப்பகுதியில் நடைபெற்றது இதையும் இவரே பொறுப்பேற்று வழிநடத்தினார்..

இவ்வாறு இந்தியாவில் பயிற்சிகளை முடித்துக் கொண்டு தமிழீழம் வந்தவ போராளிகள் தமிழீழத்தில் சிறிலங்கா இராணுவத்திற்கு எதிரான் பல தாக்குதல்களை நடாத்தினர்.

பொன்னம்மான் அவர்கள் ஒட்டுவேலைகள் பயின்று வெடிகுண்டுகளுக்கு ஏற்றவாறு வாகனங்களில் வெடிகுண்டுகளைப் பொருத்தி இராணுவ முகாம்மீதான பல தாக்குதல்களுக்கு வழிவகுத்தார்.

இதேபோன்று தான் 1987.பெப்ரவரி 14நாள் தண்ணீர் இழுக்கும் வாகனம் (தண்ணீர் பவுசர்) போன்ற வடிவில் வெடிகுண்டு ஒன்றைத் தயாரித்தார்.

தண்ணீரும், வெடிமருந்துகளும் மேலும் கீழுமாக வைத்து நுட்பாக அதனை உருவாக்கினார். சிறு துவாரத்தினூடே கசியத்தொடங்கியதும், அதனை சீர்செய்யும் போருட்டு ஒட்டு வேலைகளில் பொன்னம்மானும் அவருடன் கூட சில போராளிகளும் இருந்தார்கள்.

அப்போது அங்கு பெரும் வெடி ஓசை கேட்டது. லெப். கேணல் பொன்னம்மான், மேஜர் கேடில்ஸ், கப்டன் வாசு, வீரவேங்கை யோகேஸ், வீரவேங்கை குமணன், வீரவேங்கை கவர், 2ஆம் லெப். பரன், வீரவேங்கை தேவன், லெப். சித்தார்த்தன், வீரவேங்கை அக்பர் இவர்களுடன் நாட்டுப்பற்றாளர் ரஞ்சன் ஆகியோர் அங்கு நடந்த தவறுதலான வெடிவிபத்தில் வீரச்சாவெய்தினர்.

Copyright © 6484 Mukadu · All rights reserved · designed by Speed IT net