வனவளத் திணைக்களம் சுவீகரித்த காணிகளை மக்களிடம் கையளிக்க உத்தரவு

வனவளத் திணைக்களம் சுவீகரித்த காணிகளை மக்களிடம் கையளிக்க உத்தரவு

யாழ். மாவட்டத்தில் நாகர் கோவில் மற்றும் வடமராட்சி பிரதேசங்களில் வனவளத் திணைக்களத்திற்கு சுவீரிக்கப்பட்டுள்ள காணிகளை உடனடியாக உரிய மக்களுக்கு கையளிக்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கடுமையான உத்தரவு பிறப்பித்தார்.

மேற்படி பிரதேசம் வனவளத் திணைக்களத்தினால் சுற்றறிக்கை மூலம் அபகரிக்கப்பட்டுள்ளது என்ற குற்றச்சாட்டு, யாழ். அரசியல் பிரமுகர்களினால் பிரதமருக்கு சுட்டிக்காட்டப்பட்டது.

இதன்போது பதிலளித்த பிரதமர், உடனடியாக சம்பந்தப்பட்ட சுற்றறிக்கையை ரத்துச் செய்யுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்தார்.

மேலும், யாழ். மாவட்ட செயலகத்தில் நேற்று நடைபெற்ற மாவட்ட அபிவிருத்தி மீளாய்வுக் கூட்டத்தின்போது, மேற்படி விவகாரம் தொடர்பில் கடும் சர்ச்சை ஏற்பட்டது.

இதன்போது, காரைநகர் வடமராட்சி பகுதிகளின் மேற்படி பிரதேசம் வனவளத் திணைக்களத்திற்கு உரித்தானது என்றும் அது தொடர்பான சுற்றறிக்கையும் வெளியிடப்பட்டு அது உறுதி செய்யப்பட்டுள்ளதாக திணைக்களத்தின் உயர் அதிகாரி வலியுறுத்திக் கூறினார்.

இதன்போது, குறுக்கிட்ட பிரதமர், எக்காரணம் கொண்டும் அக்காணி மேற்படி திணைக்களத்திற்கு சுவீரிக்கக்கூடாது, அவ்வாறு அதற்கு எவ்வகையிலும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டால், தாமே அதற்கான உத்தரவைப் பிறப்பித்ததாகவும் உரிய மக்களுக்கு உடனே அக்காணி வழங்கப்பட வேண்டுமென்றும் பிரதமர் கடும் தொனியில் உத்தரவிட்டார்.

கடந்த 5 வருடங்களுக்கு முன்பே தாம் அதற்கான உத்தரவைப் பிறப்பித்தபோதும், அது தொடர்பில் இன்னமும் நடவடிக்கை எடுக்கப்படாமை தொடர்பில் தனது அதிருப்தியை வெளியிட்டதுடன், மேற்படி அதிகாரியின் செயற்பாடுகள் தொடர்பில் விசனத்தையும் தெரிவித்தார்.

இதன்போது குறுக்கிட்ட சிறிதரன் எம்.பி, அரசாங்கத்தின் காணிகள் அனைத்தும் வனவள திணைக்களத்திற்கு சொந்தமானது என்ற கோட்பாட்டில்தான், அக்காணிகளை வனவள திணைக்களம் சுவீகரிக்க திட்டமிடுவதாக தெரிவித்தார்.

அது தொடர்பில் தெளிவுபடுத்திய பிரதமர், குவேனியின் காலத்தில் தான் அவ்வாறான செயற்பாடுகள் இடம்பெற்றன. இப்போது, அதற்கான அவசியம் கிடையாது என்றும் வலியுறுத்திக் கூறினார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net