சடலத்தை மீட்கச் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் அதிர்ச்சியில் மயங்கி விழுந்து மரணம்!

சடலத்தை மீட்கச் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் அதிர்ச்சியில் மயங்கி விழுந்து மரணம்!

காட்டு யானை தாக்கி உயிரிழந்த இளம்பெண்ணொருவரின் சடலத்தை மீட்பதற்காகச் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் அதிர்ச்சியில் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவமொன்று ஏறாவூரில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.

ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள திகிலிவெட்டை எனும் கிராமத்தில் காட்டு யானை தாக்கியதில் இரண்டு பிள்ளைகளின் தாயான முத்துலிங்கம் நிரஞ்சலா (வயது 31) என்பவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இவர் திகிலிவெட்டையிலுள்ள தனது வீட்டிலிருந்து 50 மீற்றர் துருத்திலுள்ள தனது மாமியாரின் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தபோது புதருக்குள் இருந்து வெளிவந்து திடீரென வழிமறித்த காட்டு யானை இவரைத் தாக்கியுள்ளது.

மாமியாரின் வீட்டிற்குச் சென்றவர் அங்கு வந்து சேரவில்லை என்பதால் உறவினர்கள் தேடியபொழுது அவர் காட்டுப் பாதையில் காட்டு யானையின் தாக்குதலுக்குள்ளாகி இறந்திருப்பது தெரிய வந்தது.

இதில் அந்த இளம்பெண் காட்டு யானையால் துவம்சம் செய்யப்பட்டு சுருட்டப்பட்ட நிலையில் வீழ்ந்து உயிரிழந்திருந்தார்.

இச்சம்பவத்தைக் கேள்வியுற்றதும் ஏறாவூர் பொலிஸ் நிலையத்தை சேர்ந்த 4 பொலிஸ் உத்தியோகத்தர்கள் காட்டு யானையின் தாக்குதலுக்குப் பலியான இளம் பெண்ணின் சடலத்தை மீட்பதற்காகச் சென்றிருந்தனர்.

அவ்வேளையில் சடலத்தைப் பார்வையிட்ட பொலிஸ் உத்தியோகத்தரான நிதிய துரைலாகே லக்ஷ்மன் குமார ராஜபக்ஷ (வயது 37) எனும் இரண்டு பிள்ளைகளின் தந்தையான பொலிஸ் உத்தியோகத்தர் மயங்கி வீழ்ந்துள்ளார்.

சக பொலிஸ் உத்தியோகத்தர்கள் மூவரும் அவரை மீட்டு அருகிலுள்ள சந்திவெளி பிரதேச வைத்தியசாலைக்குக் எடுத்துச் சென்றபோதும் அவர் வழியிலேயே இறந்து விட்டார்.

இருவரினதும் சடலங்கள் உடற்கூறாய்வுப் பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

இவ்விரு மரணங்களும் அப்பகுதி மக்களிடையே அதிக சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவங்கள் பற்றி ஏறாவூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net