தூக்குக் கயிறின் பலம் 200 கிலோ கல்லில் பரீட்சிப்பு.

தூக்குக் கயிறின் பலம் 200 கிலோ கல்லில் பரீட்சிப்பு.

இறக்குமதி செய்யப்படவிருக்கும் தூக்குக் கயிற்றின் பலத்தை 200 கிலோ எடைகொண்ட கல்லைப் பயன்படுத்தி பரீட்சித்துப் பார்க்கவிருப்பதாக இலங்கை தரக்கட்டுப்பாடுகள் நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் டொக்டர் சித்திகா சேனாரட்ண தெரிவித்தார்.

ஏற்கனவே உள்ள தூக்குக் கயிறு பழுதடைந்திருப்பதுடன் பயன்படுத்த முடியாத நிலையிலும் உள்ளது. பாகிஸ்தானிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட இத் தூக்குக் கயிறு 12 வருடங்கள் பழைமை வாய்ந்தது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இறக்குமதி செய்யப்படும் தூக்குக் கயிறு எவ்வாறான தரமுடையது என்பதற்கான அளவீடுகள் எதுவும் இலங்கையில் இல்லை. எனவே இறக்குமதி செய்யப்படும் தூக்குக் கயிற்றுக்குக் காணப்படவேண்டிய தரத்தை அடிப்படையாகக் கொண்டே அதன் பலத்தை அல்லது தரத்தை இலங்கை தரக்கட்டுப்பாடுகள் நிறுவனம் முன்னெடுக்க வேண்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

சிறைச்சாலைகள் திணைக்களம் கடந்த வாரம் இரண்டு அலுக்கோசு பதவி வெற்றிடங்களுக்கு பத்திரிகைகளில் விளம்பரங்களை வெளியிட்டிருந்தது. அரசாங்க சுற்று நிருபத்துக்கு அமைய மாதாந்த சம்பளமாக 36, 410 ரூபா வழங்கப்படும் என்றும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதேநேரம், இலங்கையில் மீண்டும் மரண தண்டனை நடைமுறைப்படுத்தப்படுவதற்கு பல்வேறு சர்வதேச அமைப்புக்கள் தமது எதிர்ப்பைத் தெரிவித்துள்ளன.

இவ்வாறான சூழ்நிலையில் தூக்குக் கயிற்றை இறக்குமதி செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு நீதி அமைச்சு, வெளிவிவகார அமைச்சுக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளது.

மரண தண்டனை நிறைவேற்றப்படும் நாட்டிலிருந்து தூக்குக் கயிறு இறக்குமதி செய்யப்பட வேண்டும் என அக்கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பாகிஸ்தான், பங்களாதேஷ், இந்தியா மற்றும் சிங்கப்பூர் போன்ற நாடுகள் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருப்பதாகத் தெரியவருகிறது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net