பாகிஸ்தான்- இந்தியா இடையே மத்தியஸ்தம் வகிக்க தயார்: ஐ.நா

பாகிஸ்தான்- இந்தியா இடையே மத்தியஸ்தம் வகிக்க தயார்: ஐ.நா

பாகிஸ்தானுக்கும் இந்தியாவிற்கும் இடையில் அதிகரித்துவரும் பதற்றங்கள் தொடர்பாக கூடுதல் கவனம் செலுத்தி வருவதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

இதேவேளை, இருதரப்பும் கோரும் பட்சத்தில் இரு நாடுகளுக்கும் இடையே மத்தியஸ்தம் வகிக்க ஐ.நா. செயலாளர் நாயகம் தயாராகவிருப்பதாக ஐ.நா. பேச்சாளர் ஸ்டீஃபன் டுஜாரிக் (Stephane Dujarric) தெரிவித்தார்.

இந்திய- பாகிஸ்தான் விவகாரம் தொடர்பாக நேற்று (செவ்வாய்க்கிழமை) கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர்,

”இவ்விவகாரத்தில் தலையிடுமாறு பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சு, ஐ.நா. செயலாளர் நாயகத்திடம் கடிதம் மூலம் கோரியுள்ளது.

அதன்படி, இருதரப்பும் கோரும் பட்சத்தில் இவ்விவகாரத்தில் தலையிட ஐ.நா. அதிகாரிகள் தயாராகவிருப்பதாக செயலாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நிலையை கட்டுப்படுத்தி பதற்றத்தை தணிப்பதற்கு உடனடி நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் இரு தரப்பையும் செயலாளர் நாயகம் வலியுறுத்தியுள்ளார்” எனத் தெரிவித்தார்.

ஜம்மு காஷ்மீர் தாக்குதலுக்கு பாகிஸ்தான் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ள நிலையில், இந்தியா பதில் தாக்குதல் நடத்தினால், பாகிஸ்தானும் பதிலடி கொடுக்கும் என பிரதமர் இம்ரான் கான் நேற்று எச்சரித்துள்ளார்.

இந்திய நிர்வாக கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் கடந்த வியாழக்கிழமை இராணுவ வீரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்டு இயங்கும் ஜெய்ஷ்-இ-முகம்மது அமைப்பு புல்வாமா தாக்குதலுக்கு பொறுப்பேற்றது.

Copyright © 3281 Mukadu · All rights reserved · designed by Speed IT net