பருவமழியும் பாலகம்!-(வன்னியூர்- வரன்)

பருவமழியும் பாலகம்!

அகரமறியும் அகவையிலிவன்
ஆடு மேய்க்கிறான் – எதிர்
காலம் தன்னைக் காடுகரம்பை
நடந்து தேய்க்கிறான்.

கற்பதற்கோ கறுப்புநோட்டு
இல்லையென்பதால் – இவன்
கால்கள் தேய கல்லும் முள்ளும்
கடந்து திரிகிறான்.

பெற்றவர்கள் எடுத்துக்கூறத்
தவறிப் போவதால் – இவன்
போலமண்ணில் எத்தனைபேர்
தெருவில் அலைகிறார்.

உற்றவர்கள் உடனிருந்தும்
உதவத் தவறினால் – இவன்
ஊரைவிட்டு உறவைவிட்டு
ஒதுங்கி வாழுவான்.

ஆட்டுமந்தை யோடிவனைக்
கூட்டி விடுவதால் – நாளை
காட்டுவாசி போலவாகி
ரோட்டில் வாடுவான்.

மாட்டு மேய்ப்பனாகி யின்று
காட்டில் அலைவதால் – கை
மாட்டி நாளை விலங்கினோடு
நாட்டில் உலவுவான்.

வாட்டுமிவன் வறுமைநாளை
மாறிப் போகலாம் – அவன்
வீட்டு நிலைமை வளமும்கூட
மருவிப் போகலாம்.

தேட்டமாகக் தேர்ந்தகல்வி
ஊட்டத் தவறினால் – நாளை
வீட்டு வாசல் வந்துகேள்வி
கேட்டுப் பேசுவான்.

உலகத்தோடு ஒத்துவாழ
வழியைக் காட்டுங்கள் – இவன்
உள்ளத்திலே கல்வியெனும்
ஒளியை ஊட்டுங்கள்.

கல்வியதன் அவசியத்தைச்
சொல்லிக் காட்டுங்கள் – இவன்
கறைபடியா உள்ளத்தில் நற்
கருத்தை ஊட்டுங்கள்.


– நன்றி –
வன்னியூர்- வரன்
20/02/2019

Copyright © 4505 Mukadu · All rights reserved · designed by Speed IT net