வெள்ளை வானில் கடத்தப்பட்டவர்கள் கடற்படை முகாமில் தடுத்து வைக்கப்பட்டனர்.

வெள்ளை வானில் கடத்தப்பட்டவர்கள் கடற்படை முகாமில் தடுத்து வைக்கப்பட்டனர்.

கொழும்பில் வெள்ளை வானில் கடத்தி காணாமல் ஆக்கப்பட்ட 11 மாணவர்களில் ஐவர் திருகோணமலை கடற்படை தளத்தில் அமைந்துள்ள கன்சைட் முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தமைக்கான சாட்சிகள் காணப்படுவதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் நீதிமன்றத்தில் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக பலர் சாட்சியங்களை வழங்கியுள்ளதாகவும், குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளனர்.

கொழும்பில் வெள்ளை வானில் கடத்தி காணாமல் ஆக்கப்பட்ட 5 தமிழ் மாணவர்கள் உட்பட 11 பேர் தொடர்பான வழக்குவிசாரணை நேற்று(புதன்கிழமை) கொழும்பு, கோட்டை நீதவான்
நீதிமன்றில் இடம்பெற்றபோதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலமான 2008, 2009ஆம் ஆண்டுகளில் கொழும்பின் தெஹிவளை, கொட்டாஞ்சேனை ஆகிய பிரதேசங்களில் 5 தமிழ் மாணவர்கள் உட்பட 11 பேர் வெள்ளை வானில் கடத்திச் சென்று காணாமல் ஆக்கப்பட்டனர்.

இது தொடர்பான வழக்கு விசாரணை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றது.

இந்த சம்பவங்களுடன் இலங்கை கடற்படை புலனாய்வுப் பிரிவுக்கு தொடர்பிருக்கின்றமை கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், விசாரணைகளை ஆரம்பித்த குற்றப் புலனாய்வுத் திணைக்களம், கடற்படையின் புலனாய்வுப் பிரிவு அதிகாரியான லெப்டினன் கமாண்டர் சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சி உட்பட புலனாய்வாளர்களையும் கைது செய்தது.

இந்தநிலையில் இதுதொடர்பில் நேற்று இடம்பெற்ற வழக்கு விசாரணையின்போது, அறிக்கை ஒன்றை சமர்ப்பித்த குற்றப்புலனாய்வுத் திணைக்களம், கடத்தப்பட்ட 11 பேரில், ஐந்து பேர் திருகோணமலை கடற்படை தளத்தில் அமைந்துள்ள கன்சைட் முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தமை தொடர்பாக சிலர் சாட்சியமளித்துள்ளதாகத் தெரிவித்தனர்.

மேலும், குறித்த சாட்சியாளர்கள் அந்த முகாம் அமைந்துள்ள இடத்தை குற்றப்புலனாய்வுப் பிரிவினருக்கு காட்டியுள்ளதாகவும், அவர்களிடம் மேலதிக விசாரணைகளை நடத்துவதற்கு அனுமதியளிக்குமாறும் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றில் அனுமதி கோரியது.

அதேநேரம், இந்த வழக்கின் பிரதான சந்தேக நபரான லெப்டினன் கமாண்டர் சந்தன பிரசாத் உட்பட மூன்று சந்தேகநபர்களையும் எதிர்வரும் மார்ச் 6ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறும் நீதவான் உத்தரவு பிறப்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net