பிரதமரின் கருத்திற்கு – நவநீதம் பிள்ளை கடும் விமர்சனம்!

பிரதமரின் கருத்திற்கு – நவநீதம் பிள்ளை கடும் விமர்சனம்!

மறப்போம் மன்னிப்போம் என்ற பிரதமரின் செய்தியில் நீதி மற்றும் பொறுப்புக்கூறல் குறித்த முக்கியமான வாக்குறுதிகள் இடம்பெற்றிருக்கவில்லை என ஐக்கிய நாடுகளின் முன்னாள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம் பிள்ளை கடுமையாக விமர்சித்துள்ளார்

தென்னாபிரிக்க பாணியில் மறப்போம் மன்னிப்போம் என்ற இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்துள்ளமை குறித்து கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இலங்கை அரசாங்கம் நீதி மற்றும் பொறுப்புக்கூறல்களை உறுதி செய்வதாக உறுதியளித்தது. எனினும் உண்மை மற்றும் நல்லிணக்க பொறிமுறைக்கு மாத்திரம் அமைச்சரவையின் அனுமதியை பெற முயல்வதன் மூலம் பின்னோக்கி செல்ல முயல்கின்றது .

தென்னாபிரிக்காவின் மாதிரியை தவறாக அர்த்தப்படுத்துவதற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றன. தென்னாபிரிக்கா உண்மையை தெரிவிப்பது விசாரணை இழப்பீடு என்பவற்றையும் உள்வாங்கியிருந்தது.

தென்னாபிரிக்காவில் பின்பற்றப்பட்ட முறை என்பது பூரணமானது இல்லை எனினும் அங்கு நிலவிய அரசியல் சூழ்நிலைக்கு உகந்தது என்பதனால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

தென்னாபிரிக்காவில் காணப்பட்ட நிலைமையை இலங்கையில் இடம்பெற்ற விடயங்களுடன் ஒப்பிட முடியாது. இங்கு பாரிய படுகொலைகள் காணாமல் ஆக்கப்படுதல் உட்பட பல்வேறு அட்டுழியங்களை பொதுமக்கள் அனுபவித்தனர்.

இலங்கை பிரதமர் தெரிவிப்பது போன்று தென்னாபிரிக்க மக்கள் வழக்குதாக்கல் செய்யாமலிருக்கவில்லை, கடந்த மாதம் கூட பொலிஸாரினால் தடுத்து வைக்கப்பட்டிருந்தவேளை தற்கொலை செய்துகொண்டதாக தெரிவிக்கப்பட்ட ஒருவரின் குடும்பத்தவர்கள் பொலிஸாரிற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்தனர்” என நவநீதம் பிள்ளை சுட்டிக்காட்டியுள்ளார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net