பூமிக்குள் பாரிய மலைத்தொடர்கள்!

பூமிக்குள் பாரிய மலைத்தொடர்கள்!

கடலுக்குள் பெரிய மலைத்தொடர்கள் உண்டு என்பது பலருக்கும் தெரிந்தது தான். ஆனால் பூமியின் மேற்பரப்பிலிருந்து பல நூறு கிலோ மீட்டர் கீழேயும் பெரிய மலைத்தொடர்கள் இருப்பது அண்மையில் நடத்தப்பட்ட ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது.

சீனாவிலுள்ள புவி அமைப்பு மற்றும் புவி இயற்பியல் ஆராய்ச்சி நிலையம் மற்றும் அமெரிக்காவின் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகம் ஆகியவற்றைச் சேர்ந்த விஞ்ஞானிகள் இதுவரை பூமியின் ஆழப்பகுதியில் நிகழ்ந்த பெரும் நில அதிர்வுகளின் பதிவுகளை வைத்து பல மலைத்தொடர்கள் இருப்பதை கண்டறிந்துள்ளனர்.

பூமியின் கடினமான மேல் ஓட்டுப் பகுதியிலிருந்து ஆழத்திற்குப் போகப்போக கடினம் குறைந்து பூமியின் உள் மையப்பகுதி இன்னும் தீக்குழம்பாகவே இருக்கிறது.

எனவே பூமியின் ஆழப்பகுதியில் பூகம்பம் ஏற்படும் போது அதன் அதிர்வலைகள் பூமியின் மையம் வரை பயணித்து மறுபக்கம் வரை சென்று மீண்டும் திரும்பும். ஆனால் சில பகுதிகளில் அதிர்வலைகள் பட்டுத் திரும்பாமல் இருப்பதை விஞ்ஞானிகள் ஆராய்ந்தனர்.

உதாரணமாக 1994 இல் பொலிவியாவில் ரிக்டர் அளவுகோலில் 8.2 அளவுக்கு பூகம்பம் ஏற்பட்டது. அப்போது செய்த பதிவுகளின்படி பூமியின் மேல் பகுதிக்கும் மையப்பகுதிக்கும் இடையே சில பகுதிகளில் அதிர்வலைகளின் பதிவு வேறுபட்டு இருந்தது. இதை வைத்து பூமிக்கடியிலும் கடினமான மலைப்பகுதிகள் இருக்கின்றன என்பதை விஞ்ஞானிகள் உறுதிபடுத்தியுள்ளனர்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net