அட்மிரல் வசந்தவின் கடவுச்சீட்டு முடக்கம்.

அட்மிரல் வசந்தவின் கடவுச்சீட்டு முடக்கம் – விரைவில் கைது செய்ய நடவடிக்கை!

முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொடவின் கடவுச்சீட்டை முடக்கி வைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், அவர் விரைவில் கைது செய்யப்படுவார் என பொலிஸ் வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில், 2008-2009 காலப்பகுதியில் 11 இளைஞர்கள், கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட வழக்கிலேயே அட்மிரல் கரன்னகொட கைது செய்யப்படவுள்ளார்.

இவர் நாட்டை விட்டுத் தப்பிச் செல்லக் கூடும் என்று நேற்று முன்தினம் (வெள்ளிக்கிழமை) கோட்டை நீதவான் ரங்க திசநாயக்கவிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் முறையிட்டதையடுத்து, அட்மிரல் கரன்னகொடவின் கடவுச்சீட்டை முடக்கி வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இந்த நிலையில் அட்மிரல் கரன்னகொடவைத் தேடி வருவதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

கொலை செய்ய சதித் திட்டம் தீட்டினார் என்பது உள்ளிட்ட 4 குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளன.

அட்மிரல் கரன்னகொடாவுடன் நேரடியாக தொடர்புபட்டிருந்த கடற்படையினர் எவ்வாறு செல்வந்த வணிகர்களின் குடும்பத்து பிள்ளைகளைக் கடத்திச் சென்று, கப்பம் பெற்ற பின்னர் அவர்களைக் கொலை செய்தனர் என்ற விபரங்களை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் வெளிப்படுத்தியுள்ளனர்.

இந்த வழக்கில் அட்மிரல் கரன்னகொட 14 ஆவது சந்தேக நபராக சேர்க்கப்பட்டுள்ளார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net