மத்திய வங்கியின் வட மாகாண அறிக்கை தொடர்பில் மங்கள விளக்கம்.

மத்திய வங்கியின் வட மாகாண அறிக்கை தொடர்பில் மங்கள விளக்கம்.

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் விரைவாக பொருளாதார அபிவிருத்தியை மேற்கொள்வதற்கு அரசாங்கம் திட்டமிட்டிருப்பதாக அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

மத்திய வங்கி வெளியிட்டுள்ள வடமாகாணம் தொடர்பான பொருளாதார அபிவிருத்தி அறிக்கை தொடர்பான ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

இந்த சந்திப்பில் அவர் மேலும் தெரிவித்தாவது,

எதிர்வரும் சில வருடங்களுக்குள் பல்வேறு திட்டங்களின் கீழ் வட மாகாண சபை அபிவிருத்தி செய்யப்படவுள்ளதுடன் வட பகுதியை அபிவிருத்தி செய்வதற்கு அரசாங்கம் தரும் முக்கியவத்துவம் தொடர்பாக இலங்கைக்கு ஆதரவு தரும் நாடுகள் கவனத்திற் கொள்ள வேண்டும்.

வறட்சியினால் பாதிக்கப்பட்ட 13 மாவட்டங்களில் நாம் பெண்களின் கடன்களை அண்மையில் இரத்துச் செய்தோம். கடந்த வாரம் வடக்குக்கு 3 நாள் விஜயமொன்றை மேற்கொண்ட பிரதமர் ரணில் விக்கிரம சிங்க பெண்களுக்கு 1,400 மில்லியன் ரூபா கடன் நிவாரணம் வழங்கும் திட்டத்தை ஆரம்பித்து வைத்தார்.

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வட மாகாணத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக நிதி அமைச்சு கடந்த நான்கு வருடங்களாக குறிப்பிடத்தக்க முக்கியத்துவத்தை வழங்கி வந்திருக்கிறது.

இன நல்லிணக்கம், சமூகங்களுக்கு அதிகாரமளித்தல், ஒதுக்கப்பட்ட பெண்களுக்கு நிவாரணம் வழங்குதல், யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி வழங்கும் பொறிமுறைகளை உருவாக்குதல் உள்ளிட்ட பல விடயங்கள் வட மாகாணத்துக்கென நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.

அத்துடன் வரவுசெலவுத் திட்டத்தில் முதல் முறையாக வடக்குக்கு இன நல்லிணக்கம் என்ற பிரிவுக்காக 12 ஆயிரம் மில்லியன் ரூபாவுக்கு மேல் ஒதுக்கீடு செய்யப்பட்டு 20 திட்டங்கள் உருவாக்கப்பட்டன.

நிதி அமைச்சர் என்ற ரீதியில் நான் பல தடவை வடக்குக்கு விஜயம் செய்துள்ளேன். அத்துடன் திறைசேரியின் நிதி உதவி மூலம் செயல்படுத்தப்பட்ட திட்டங்களின் முன்னேற்றத்தை கிரமமாக நேரடியாக பரிசீலித்து வந்திருக்கின்றேன் என்றார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net