மீண்டும் தமிழர் பிரச்சினையில் லிபரல் கட்சியின் இரட்டை வேடம்!

மீண்டும் தமிழர் பிரச்சினையில் லிபரல் கட்சியின் இரட்டை வேடம்!

ஐக்கிய நாடுகள் சபை விதித்த நிபந்தனைகளை இலங்கை அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்ற மசோதாவை, கனடாவின் கொன்சவ் வேட்டிவ் கட்சி கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளை நிறைவேற்றியதுடன், அதற்கு ஆதரவு தரும்படி லிபரல் மற்றும் என்.டி.பி. கட்சிகளைக் கோரியுள்ளது.

இதற்கு மறுப்புத் தெரிவிக்காத நிலையில், கொன்சவ்வேட்டிவ் கட்சி கொண்டு வரவிருந்த இந்த மசோதா, உடனடியாக அங்கீகாரம் பெறுமென நம்பப்படுகின்றது.

இப்படி இந்த மசோதா அங்கீகரிக்கப்படும் பட்சத்தில், அது இலங்கை அரசுக்கு ஒரு மிகப்பெரிய சர்வதேச அழுத்தத்தை மீண்டும் வழங்கும் என்பதில் ஐயமில்லை.

ஐ.நா.வின் 30 / 1 என்ற அறிக்கையின் கீழ், மனித உரிமை மீறல் மற்றும் போர்க்குற்றச்சாட்டு விடயத்தில் உடனடியாக உரிய செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டுமென்று அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த மசோதாவை, சஸ்கச்சுவான் சேர்வூட் பாக் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும், ஈழத் தமிழர் விவகாரத்தில் அதிக பட்ச குரல் கொடுப்பவருமான கானட் ஜெனஸ் தயார் செய்துள்ளார்.

அதன்படி, இந்த அறிக்கையை குறிப்பிட்ட காலத்திற்குள் முழுமையாக நிறைவேற்ற வேண்டுமென்ற அழுத்தத்தை கனடிய அரசு கொடுப்பதற்கான ஏற்பாடாகவே பார்க்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இதை கொன்சவ்வேட்டிவ் கட்சி கொண்டு வந்து விடக்கூடாது என்று எண்ணிய லிபரல் கட்சியினர், இரகசியமாக முடிவெடுத்து, ஓரிரு மாற்றங்களுடன் தமது கட்சியின் சார்பில் ஒரு மசோதாவை நாடாளுமன்றில் திடீரெனக் கொண்டு வந்துள்ளனர்.

இதைப்பற்றி ஏற்கனவே உறுப்பினர்களுக்கு அறிவிக்கப்பட்டிருக்காத நிலையில், இந்த மசோதாவை கொன்சவ்வேட்டிவ் கட்சி ஆதரித்த போதிலும், என்.டி.பி. கட்சியின் உறுப்பினர் ஒருவர் நிராகரித்ததால் இந்த மசோதா அங்கீகாரம் பெறவில்லை.

இந்நிலையில், தாங்கள் ஏற்கனவே தயாரித்த மசோதாவை கொன்சவ்வேட்டிவ் கட்சி நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது. இருப்பினும் அதை லிபரல் கட்சி உறுப்பினர் ஒருவர் நிராகரித்ததால், அந்த மசோதாவும் அங்கீகாரம் பெற முடியாமல் போயுள்ளது.

ஈழத்தமிழர்களின் பிரச்சினை விடயத்தில், தமிழர்களுக்கு நன்மை கிடைப்பதை விட, தங்கள் கட்சிக்கு விழுக்காடு வந்து விடக்கூடாது என்ற கபட நோக்குடன் செயற்பட்ட கனடிய லிபரல் கட்சி, மீண்டும் தமிழினத்திற்கு துரோகமிழைத்திருப்பதையே இது சுட்டிக்காட்டுகின்றது.

லிபரல் கட்சியில் ஒரு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் இருந்தும் கூட, அவரது அரசியல் இருப்புக்காகவும், ஸ்காபரோவில் வேறு எந்த தமிழரும் நாடாளுமன்றத்தில் நுழையும் வாய்ப்பைப் பெற்று விடக்கூடாது என்ற நோக்குடனும், தமிழினத்தைப் பலிக்கடாவாக்கியிருக்கிறது லிபரல் கட்சி.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net