ராஜபக்ச வழியில் மோடியின் வியூகம்! தகர்த்தாரா பாகிஸ்தான் பிரதமர்?

ராஜபக்ச வழியில் மோடியின் வியூகம்! தகர்த்தாரா பாகிஸ்தான் பிரதமர்?

ஒரு பெரும் போர்ப் பதற்றத்தில் இருந்து மீண்டிருக்கிறது இந்தியாவும் பாகிஸ்தானும். இப் பிரச்சினையை சுமூகமாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கையாண்டுள்ளார் என்று பாராட்டுக்கள் குவிந்து கொண்டிருக்கின்றன.

புல்வாமா மீதான தாக்குதலையடுத்து தொற்றிக்கொண்ட போர் மேகங்கள், இந்தியர்களை கோபம் கொள்ளச் செய்தது. தமது நாட்டுப் படை வீரர்களை பாகிஸ்தானிலிருந்து இயங்கும் இயக்கம் ஒன்று தற்கொலைப் படைத்தாக்குதல் மூலமாக கொலை செய்திருக்கிறது. பழிக்குப் பழியாக பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தப்பட வேண்டும் என்று கொதித்தனர்.

இதற்கான பதிலடியாக இந்திய விமானப் படை பாகிஸ்தான் பகுதிகளுக்குச் சென்று விமானத் தாக்குதல்களை நடத்தியது.

இத் தாக்குதலில் பலர் கொல்லப்பட்டதாக இந்தியத் தரப்புச் செய்திகள் தெரிவித்தாலும், அத் தாக்குதலில் எவரும் கொல்லப்படவில்லை என பாகிஸ்தான் தகவல்கள் மறுப்புத் தெரிவித்தன.

இதனையடுத்து மீண்டும் தாக்குதல் நடத்த முயற்சித்த இந்திய விமானத்தை பாகிஸ்தான் இராணுவம் சுட்டு வீழ்த்தியது. இதன்போது பாகிஸ்தானுக்குள் அகப்பட்ட விமானப் படை வீரரை மீட்குமாறும் கோரிக்கைகள் எழுந்தன.

ஆனால், புல்வாமா தாக்குதலும், பாகிஸ்தான் மீது விமானத் தாக்குதல்ககளை நடத்தியதையும் கொண்டு வரும் மக்களவைத் தேர்தல் வெற்றியை உறுதிப்படுத்த பாரதிய ஜனதா கட்சி பயன்படுத்தப்பார்க்கிறது என்கின்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றது.

குறிப்பாக இந்த நான்கு ஆண்டுகளில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சியின் செல்வாக்கு சடுதியாக சரிந்து கொண்டது, இதேவேளை ஐந்து மாநிலங்களில் நடந்த தேர்தலில் எதிர்பார்த்த வெற்றியை பாஜக பெறவில்லை.

ஆனால், காங்கிரஸ் கூட்டணி தன்னுடைய பலத்தை நிரூபித்து வெற்றியை பெற்றது. மேலும் தமிழகத்திலும் பலமான கூட்டணியை உருவாக்கியிருக்கிறது காங்கிரஸ். அதிமுகவிற்கான ஆதரவு மிகக் குறைவு என்பதாலும், ஆட்சியை திமுக கைப்பற்றும் என்றும் சில கணிப்புக்கள் உண்டு. இதனைக் கொண்டு அடுத்த மக்களைத் தேர்தலில் இந்தியளவில் பாரதிய ஜனதா கட்சியின் வெற்றிவாய்ப்பு என்பது கேள்விக் குறியாக மாறியது.

இதனை அப்படியே மாற்றுவதற்கான ஒரு கருவியாக புல்வாமா தாக்குதலும் பதிலுக்கு பாகிஸ்தான் மீதான விமானக் குண்டுத்தாக்குதல்களும் வெளியான செய்திகளும் உறுதிப்படுத்துவதாக விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.

இந்த தந்திரோபாய நகர்வை பிரதமர் மோடி இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பாணியில் நடைமுறைப்படுத்த முயற்சித்திருக்கிறார்.

விடுதலைப் புலிகளை அழிப்பதாக களமிறங்கிய மகிந்த ராஜபக்ச சிங்கள மக்களிடம் இருந்த தேசிய உணர்வையும், சிங்கள பௌத்த பேரினவாத சிந்தனையையும் கிளர்ச்சியடையச் செய்து தமிழ் மக்கள் மீதான குரோதத்தை வளர்த்து அதன் மூலமாக தன்னுடைய ஆட்சியை தக்க வைத்துக் கொண்டு தேர்தல் களத்தில் வெற்றி பெற்றார்.

புலிகளை வெற்றி கொண்டதன் மூலம் தன்னை யுத்த வெற்றிநாயகன் என்று பறைசாற்றிய மகிந்த ராஜபக்ச, இனிமேல் இலங்கையின் முடிசூடா மன்னன் என்னும் கர்வத்தைத் தொட்டார். புலிகள் மீதிருந்த சிங்கள மக்களின் வெறுப்பு மகிந்த ராஜபக்சவிற்கான வாக்குகளாக குவிந்தன. பின்னர் புலிகள் அழிக்கப்பட்ட போது யாராலும் வெற்றி கொள்ளமுடியாத போரை முடித்தார் மகிந்த என்பதால் அவரின் வெற்றியை மீண்டும் உறுதிப்படுத்தினார்கள்.

எவ்வாறாயினும் மகிந்த ராஜபக்ச அடுத்தடுத்த தேர்தலில் தோற்றாலும் அவருக்கான கணிசமான வாக்குகள் இன்னமும் இருக்கின்றன. போர் வெற்றி நாயகன் என்றும் அப்பட்டத்தை அவர் தக்க வைத்துக் கொண்டுதான் இருக்கின்றார். அதேபோன்று, சிங்கள மக்களைச் சந்திப்பதும், பௌத்த விகாரைகளில்பெரும் வழிபாடுகளைச் செய்து தன்னை சிங்கள பௌத்த பேரினவாதத் தலைவர் என்பதையும் காட்டிக் கொண்டிருக்கிறார்.

ராஜபக்சவின் அதேவடிவத்தை இந்தியப் பிரதமர் மோடியும் பயன்படுத்த முயற்சித்து தோல்வி கண்டிருப்பதாக தோன்றுகிறது. பாகிஸ்தான் மீதான பொதுவான வெறுப்பினை இக்குண்டுத் தாக்குதல் மூலமாக மேலும் மக்கள் மத்தியில் பலப்படுத்தி அவர்களின் அடிப்படையான உணர்வினைத் தூண்டிவிட்டு தனக்கான வாக்கு வங்கி அரசியலை நிரப்ப முயற்சித்திருக்கிறார். முழுக்க முழுக்க ராஜபக்சவின் அரசியல் பாணியினாலானது என்றால் தவரல்ல.

சிங்கள மக்கள் மத்தியில் பௌத்தம் சிங்களம் என்று உணர்வினை தூண்டியவர் ராஜபக்ச. அதேபோன்று இந்து, இந்துத்துவம், பாகிஸ்தானிய எதிர்ப்பு என்பனவற்றை தங்களுக்கான அரசியல் பிரசாரமாக பயன்படுத்திக் கொள்வதற்கு முயற்சித்திருக்கிறார்.

அதற்கான வியூகத்தினை பாரதிய ஜனதா கட்சியின் தலைமைப்பீடம் மேற்கொண்டதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன. எவ்வாறாயினும் மோடியின் இத்திட்டத்தை தவுடு பொடியாக்கியுள்ளார் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் என இந்தியத் தொலைக்காட்சிகள் வர்ணித்துக் கொண்டிருக்கின்றன.

பாகிஸ்தானில் அகப்பட்ட விமானப் படை வீரர் தொடர்பி்ல இன்று நாடாளுமன்றத்தில் இம்ரான் கான் பேசியது பல்வேறு தலைவர்களினதும் பொது மக்களினதும் பாராட்டுக்களைப் பெற்று இருக்கிறது. நாடாளுமன்றத்தில் பேசிய அவர்,

“ இந்தியா மீது போர் தொடுக்க வேண்டிய அவசியம் என்றும் பாகிஸ்தானுக்கு இருந்தது இல்லை. தேர்தல் வரும் சமயங்களில் இரு நாட்டு அரசியல்வாதிகளும் தங்களின் அரசியல் தேவைகளுக்காக போர் பதற்றத்தை ஏற்படுத்துகின்றனர்.

முன்னர் பாகிஸ்தான் பிரதமர் முஷாரப்பும் இதேபோன்ற நடைமுறையை கையாண்டார். இன்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் முயற்சி செய்கின்றார்.

போர் ஏற்படும் பதற்றமான சூழ்நிலையில் ஒரு நாட்டுத் தலைவர் இராணுவ உயர்மட்டத்தினரிடம் பேச்சுவார்த்தைகளை நடத்துவார். ஆனால் இந்தியப் பிரதமர் வாக்காளர்கள் மத்தியில் பேசிக் கொண்டிருக்கிறார்.” என்று தடாலடியாக பேசியிருக்கிறார்.

மேலும், “தீவிரவாதத்திற்கு மதம் கிடையாது. தற்கொலை படை தாக்குதல்கள் மதத்தின் பெயரால் நடப்பது இல்லை. நியூயார்க் இரட்டை கோபுர தாக்குதலுக்கு முன்பாக உலக அளவில் அதிக அளவில் தற்கொலை படை தாக்குதலை நடத்தியது விடுதலை புலிகள்தான். தாக்குதல் நடத்தியவர்கள் அனைவருமே இந்துக்கள்.

ஆனால் மதத்தின் பெயரால் நடத்தவில்லை. மாறாக தங்களது விரக்தி மற்றும் கோபத்தின் விளைவாகவே அதனை செய்தனர்.” என்றும் குறிப்பிட்டதன் மூலமாக தாக்குதல்கள் ஏன் அமைப்புக்கள் நடத்துகின்றன என்பதற்கும் விளக்கம் கொடுத்திருக்கிறார்.

எவ்வாறாயினும் அரசியல் வெற்றிக்கான வியூகத்தை இம்ரான் கான் உடைத்திருப்பது பாரதிய ஜனதா கட்சிக்கு விழுந்த அடியாகவே இந்திய அரசியல் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றார்கள். ஏற்கனவே செல்வாக்கு சரிந்திருந்த அக்கட்சிக்கு இப்பொழுது மீண்டும் சரிவினை இம்ரான் கான் இன்றைய அறிவிப்பின் மூலமாக கொடுத்திருக்கின்றன என்கின்றன தகவல்கள்.

Copyright © 7880 Mukadu · All rights reserved · designed by Speed IT net