போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்படாமை, நிரந்தர பாதிப்புக்கே வழியேற்படுத்தும்!

போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்படாமை, நிரந்தர பாதிப்புக்கே வழியேற்படுத்தும்!

இலங்கையில் போர் முடிவடைந்து 10 வருடங்களாகியும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்படாமையானது நீண்டகால பாதிப்புக்களுக்கு வழியை ஏற்படுத்திவிடும் என உலக தமிழர் பேரவை தெரிவித்துள்ளது.

உலக தமிழர் பேரவை விடுத்துள்ள பிந்திய அறிக்கை ஒன்றிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்பட்டு பிரச்சினை தீர்க்கப்படவேண்டும். தொடர்ந்தும் ஏற்படும் தாமதம் நீண்டகால பாதிப்புக்களை கொண்டு வந்துவிடும்.

10 வருடங்களுக்கு முன்னர் முடிவடைந்த போரின் காரணமாக தமிழ் சமூகம் பாரிய பாதிப்பை சந்தித்தது.

மரணங்கள், காணாமல் போதல் மற்றும் இடப்பெயர்வு என்று பாதிக்கப்படாத குடும்பங்களே இல்லை என்று அளவுக்கு தமிழர்கள் பாதிக்கப்பட்டனர்.

இந்தப்போரின் சாட்சியங்களை அழித்து விட இலங்கை அரசாங்கம் முயற்சித்தபோதும் வெளியான காணொளிகள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் சாட்சியங்கள் இலங்கை அரசாங்கத்தின் போர்க்குற்றங்களை வெளியில் கொண்டு வந்தன.

இந்த நிலையில் சர்வதேசத்தின் அழுத்தங்களுக்கு மத்தியில் கொண்டு வரப்பட்ட ஐக்கிய நாடுகளின் பரிந்துரைகளை இணை அனுசரணையாளராக இருந்து நிறைவேற்ற இலங்கை உடன்பட்டது.

எனினும் இன்னும் இலங்கை அரசாங்கம் தமது உறுதிமொழியை நிறைவேற்றவில்லை. பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு பதிலாக புதிய சர்வதேச நியம சட்டம் ஒன்று கொண்டு வரப்படவில்லை.

காணாமல் போனோர் அலுவலகம் அமைக்கப்பட்ட போதும் அது நீதி நடைமுறைகளை இன்னும் ஆரம்பிக்கவில்லை.

போர்க்குற்ற விசாரணைகளுக்கு சர்வதேச நீதிபதிகள் இணைக்கப்படக்கூடாது என்று தொடர்ந்தும் இலங்கையின் அரசாங்கங்கள் வலியுறுத்தி வருகின்றன.

இந்நிலையில் ஐக்கிய நாடுகளின் இணை அனுசரணையில் இருந்து இலங்கையை விலக்கிக்கொள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எடுப்பதாக கூறப்படும் முயற்சிகளும் உண்மைகளை கூறி இரண்டு தரப்பும் மன்னிப்பை கோரவேண்டும் என்ற நிலைப்பாடு பயங்கரமான சூழ்நிலையை ஏற்படுத்தும்.

போர்க்குற்ற விசாரணைகளை தடுத்து சர்வதேசத்தின் முயற்சிகளை பலவீனப்படுத்தும் நடவடிக்கைகளாகவே இந்த முயற்சிகள் அமையும் எனவும் உலக தமிழர் பேரவை தனது அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Copyright © 0268 Mukadu · All rights reserved · designed by Speed IT net