போதைப்பொருள் பாவனை குறித்து பேசுவோர் மதுபானசாலைகளை மறந்து விட்டனரா ?

போதைப்பொருள் பாவனை குறித்து பேசுவோர் மதுபானசாலைகளை மறந்து விட்டனரா ?

பெருந்தோட்ட சமூகம் அதிகமாக வாழ்ந்து வரும் மாவட்டங்களில் நுவரெலியா முதலிடம் பெறுகிறது. அதே வேளை புவியியல் ரீதியாக பார்க்கும் போது பெருந்தோட்டங்களை அண்டியதாக அல்லது மிகவும் நெருக்கமாக அதிக மதுபான சாலைகளைக்கொண்ட மாவட்டமாகவும் இது விளங்குகிறது.

தற்போது போதைப் பொருட்களைப்பற்றியும் அதை பாவிக்கும் அரசியல்வாதிகளைப்பற்றியும் பேசும் பருவகாலம் ஆரம்பித்துள்ளது.

இதை தமது தனிப்பட்ட அரசியல் நிகழ்ச்சி நிரல்களுக்காகவும் வேறு காரணங்களுக்காகவும் முன்னெடுப்பவர்களே அதிகம். மட்டுமல்லாது தற்போது நுவரெலியா மாவட்டத்தில் போதைப் பொருள் பாவிக்கும் அரசியல் பிரமுகர்கள் பற்றிய கதைகளே அதிகரித்துள்ளன.

இதில் ஆச்சரியம் என்னவென்றால் ஒரு காலத்தில் அரசியல் பிரமுகர்களின் கோட்டாவின் கீழ் நுவரெலியா மாவட்டத்தில் முளைத்த மது பான நிலையங்கள் அதன் விளைவுகள் பற்றி கதைக்காத மலையக சமூகம் தற்போது போதைப் பொருள் பாவனையையும் அதை பாவிப்பதாகக் கூறப்படும் அரசியல்வாதிகள் பற்றியும் அதிகமாக கதைத்து வருகிறது.

இந்த விமர்சனங்கள், எதிர்த்தாக்குதல்கள் அனைத்துமே அரசியல் பிரதிநிதிகளின் பேஸ்புக் போராளிகளால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. உண்மையில் நுவரெலியா மாவட்டத்தில் போதைப் பொருள் பாவனையை விட மது பாவனையாளர்கள் அதிகம் என்பது கண்கூடு. இதற்குக்காரணம் மாவட்டத்தில் அமைந்துள்ள சுமார் 180 மதுபான நிலையங்கள்.

நுவரெலியா மாவட்டம்

இலங்கையில் மதுபான நிலையங்களுக்கான அனுமதி பத்திரங்களை வழங்கும் கலால் திணைக்களமானது நுவரெலியா மாவட்டத்தின் இரண்டு பிரிவுகளை (கிளைகளை ) கொண்டு இயங்கி வருகின்றது. அட்டன் மற்றும் நுவரெலியா ஆகிய இரு கிளைக் காரியாலயங்களே அவை. இதில் அட்டன் காரியாலயத்தின் கீழ் 97 மதுபான நிலையங்களுக்கு அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன.

அதே போன்று நுவரெலியா பிரிவில் 80 அனுமதிப் பத்திரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. இவை தனியாக இயங்கும் மதுபான நிலையங்கள் மற்றும் ஹோட்டல்களோடு இணைந்து இயங்குபவையாகும். மதுபான விற்பனைக்கான அனுமதி பத்திரங்களில் 22 பிரிவுகள் இருக்கின்றன.

அந்த 22 பிரிவுகளிலும் கணிசமான அளவு அனுமதிப் பத்திரங்கள் நுவரெலியா மாவட்டத்தில் விநியோகிக்கப்பட்டுள்ளன. இதில் கள்ளுத்தவறணைகளும் அடங்குகின்றன.

கோட்டா முறை

பல வருடங்களுக்கு முன்பு மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்கள்,பிரதி அமைச்சர்கள்,எம்.பிக்கள் ஏன் அரசியல்வாதிகளின் இணைப்புச்செயலாளர்களுக்கும் கோட்டா முறையில் மதுபான அனுமதிப் பத்திரங்கள் விநியோகிக்கப்பட்டன.

அதாவது அரசியல் பிரமுகர்களுக்கென்று இல்லாது சிபாரிசுகளின் அடிப்படையில் இம்முறை கொண்டு வரப்பட்டாலும் அதை பெற்றுக்கொள்வதில் அவர்களே அதிக அக்கறை காட்டினர். அதை அவர்கள் ஒரு தொகை வைத்து ஏனையவர்களுக்கு விற்பனை செய்து வந்தனர். பின்பு அந்த நடைமுறை இல்லாதொழிக்கப்பட்டது.

நுவரெலியா மாவட்டம் குளிர் பிரதேசம் என்றபடியினாலும் உல்லாசப்பயணிகள் அதிகம் வந்து செல்லும் ஒரு மாவட்டமாகையாலும் அதிக மதுபான அனுமதி பத்திரங்கள் விநியோகிக்கப்பட்டன. ஆனால் இங்கு பிரச்சினை என்னவென்றால் அதில் ஐம்பது வீதமான மதுபானசாலைகள் எப்படி தேயிலைத்தோட்டங்களை அண்டி அமைக்கப்பட்டன என்பது தான்.

இதற்கு யார் அனுமதி வழங்கியது என்பது முக்கிய விடயம். பெருந்தோட்டங்களுக்குள் ஒர் எலி புகுந்தாலும் அது அங்குள்ள தொழிற்சங்கத்தை தாண்டித்தான் போக வேண்டும் என்பது முக்கிய விடயம். தொழிற்சங்கங்களுக்குத் தெரியாது அங்கு ஒன்றும் நடக்காது. அப்படியிருக்கும் போது இன்று பல தோட்டங்களுக்கு நாம் செல்ல வேண்டியிருந்தால் மதுபானசாலைகளை கடந்தே செல்ல வேண்டியுள்ளது.

கண்ணை மூடிக்கொண்டு இதற்கு அனுமதி வழங்கியது யார் என்பதை சொல்லித் தெரியவேண்டியதில்லை.இலங்கையில் அதிக மதுபாவனையில் ஈடுபடுவோர் உள்ள மாவட்டங்களில் நுவரெலியா இரண்டாவது இடத்தில் உள்ளது.

இம்மாவட்டத்திலிருந்து மது பாவனையால் வருடத்துக்கு அரசாங்கத்துக்கு கிடைக்கும் வருமானம் 16 ஆயிரம் மில்லியன் ரூபாவுக்கும் அதிகமாகும். ஆகவே இந்த புள்ளி விபரங்கள் பகிரங்கமாக இருந்தாலும் கூட அது பற்றி கேள்வி எழுப்பவோ அல்லது இதை கட்டுப்படுத்தவோ எந்த பிரதிநிதிகளும் முன்வருவதில்லை.

இந்நிலையில் தற்போது போதைப் பொருள் பாவிக்கும் அரசியல்வாதிகள் பற்றி பலர் கவலை தெரிவித்து வருவது நகைப்பிற்குரியது. போதை பொருள் பாவனை குறித்து பல நகரப்பாடசாலைகளின் மாணவர்கள் மீது குற்றச்சாட்டு எழுந்திருந்தது. ஒரு சில பாடசாலைகளின் வகுப்பறைகளுக்குள்ளேயே சில போதையூட்டும் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டிருந்தன.

அது குறித்து ஒன்றும் நடவடிக்கை எடுக்க முடியாத குழப்பகரமான நிலைமைக்கு பாடசாலை சமூகம் தள்ளப்பட்டிருந்தது. இதை எவ்வாறு கையால்வது மாணவர்களை எங்ஙனம் அணுகுவது என்பது குறித்து அவர்களுக்கு உதவ எவருமே வரவில்லை.

அதே வேளை நுவரெலியா மாவட்டத்தின் சில நகரபாடசாலைகளை குறி வைத்து போதைப் பொருள் விநியோகத்தை கச்சிதமாக மேற்கொள்ளும் தீய சக்திகள் பலரது மௌனத்தை தமக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டன.

அதாவது பாடசாலை மாணவர்கள் போதைப் பொருள் பாவனையில் ஈர்க்கப்பட்டு வருகின்றனர் என்ற தகவல்கள் குறித்து நுவரெலியா மாவட்ட அரசியல் பிரதிநிதிகள் எவருமே அலட்டிக்கொள்ளவில்லை. இந்த அலட்சியப்படுத்தலே இப்போது சந்தேகங்களையும் எழுப்பி உள்ளது.

இதை கண்டும் காணாததும் போன்று இருந்ததையிட்டு இதன் பின்னணியில் இவர்களின் செயற்பாடுகளும் இருந்ததோ என்ற சந்தேகம் நிலவுகிறது. அதை விட தற்போது அரசியல்வாதிகள் சிலர் போதை பொருட்களை பாவிப்பது தொடர்பில் எழுந்து வரும் சர்ச்சைகளையும் எதிர்ப்புகளையும் பார்க்கும் போது இப்படியான எதிர்ப்புகள் ஏன் பாடசாலை மாணவர்கள் போதைப் பொருட்களை பாவிப்பது தொடர்பில் எழவில்லை என்ற கேள்வியும் எழுகிறது.

பொதுவாக அரசியல்வாதிகளின் ஆதரவாளர்கள் இரண்டு பிரிவுகளில் உள்ளனர். முதலாவது அவர்களிடமிருந்து வரப்பிரசாதங்களையும் சலுகைகளையும் பெற்று வாழ்பவர்கள் ,இரண்டாவது அவர்களிடமிருந்து ஒன்றுமே கிடைக்காவிட்டாலும் கூட கட்சி விசுவாசம் என்ற அடையாளத்துடன் வாழ்ந்து வருபவர்கள்.

இதில் இரண்டாம் பிரிவினர் தமது தலைவர் நல்லது கெட்டது என எது செய்தாலும் வாய் திறக்காத வர்க்கத்தினர். ஆனால் முதல் பிரிவினரே தற்போது அதிகமாக இவ்விவகாரம் குறித்து பேசி வருகின்றனர். அப்படி பேசாவிட்டால் அவர்களது கட்சி இருப்பு கேள்விக்குறியாகி விடும். இவர்களை பேச வைக்காவிட்டால் பிரதிநிதிகளின் அரசியல் இருப்புக்கு ஆப்பு நெருங்கி விடும். இதிலிருந்து ஒரு விடயத்தை நாம் அறிந்து கொள்ளலாம்.

போதைப் பொருள், மது மற்றும் இன்னோரன்ன கலாசார சமூக சீர்கேடுகளில் சிக்கி இந்த சமூகம் எக்கேடாவது கெட்டுப்போனால் என்ன அது குறித்து எக்காலத்திலும் இவர்கள் வாய் திறக்கப்போவதில்லை. ஆனால் இந்த விவகாரங்களில் தமது பெயருக்கு களங்கம் ஏற்பட்டால் அதை அவர்களால் தாங்க முடியாதுள்ளது.

இது வரை இம்மாவட்டத்தின் எந்த அரசியல்வாதிகளாவது அதிகரித்து வரும் மதுபானசாலைகள் குறித்து கேள்வி எழுப்பியிருக்கின்றனரா அல்லது அது தொடர்பான எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொண்டிருக்கின்றனரா? மது அல்லது போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்வுகளில் இவர்களில் எவராவது கலந்து கொண்டு அதற்கு எதிராக பேசியிருக்கின்றனரா? முழுக்க முழுக்க ஒரு சமூகத்தை மது எனும் போதைக்குள் தள்ளி விட்டு தற்போது தமது பெயருக்கு களங்கம் ஏற்பட்டவுடன் தமது ஆதரவாளர்களை விட்டு அதை மறுத்து பிரசாரம் செய்து வருகின்றனர்.

இது குறித்து சிவில் அமைப்புகள் கூட கேள்வி எழுப்புவதில்லை. முதலில் சமூகத்துக்கு ஆபத்தாக இருப்பவர்களை இளைஞர்கள் கண்டு கொள்வது அவசியம். இலங்கையில் எல்லா பாகங்களிலும் வாழ்ந்து வரும் மக்கள் மது அருந்துகின்றனர்.

ஆனால் நுவரெலியா மாவட்டத்தில் மட்டும் இது ஒரு திட்டமிடப்பட்ட செயற்பாடாகவும் நீண்ட நாள் தேவைக்கான ஏற்பாடாகவும் ஒரு சிலரால் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இனி இம்மாவட்டத்தில் புதிதாக அனுமதி பத்திரங்களை விநியோகிக்க மாட்டோம் என நுவரெலியா கலால் திணைக்கள அதிகாரி ஒருவர் கேசரிக்குத்தெரிவிக்கிறார்.

ஆனால் இலங்கை அரசியலைப் பொறுத்தவரை தற்போது எல்லா நகர்வுகளுமே ஒரு சர்வாதிகார போக்குடனேயே சென்று கொண்டிருக்கின்றன. அரசியல் அதிகாரத்தில் இருந்தால் யாரும் என்ன வேண்டுமென்றாலும் செய்யலாம் என்பதே அது!

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net