கலாசார பல்வகைமையின் பெறுமதியை அறிய சிவராத்திரி வழிவகுக்கும்!

கலாசார பல்வகைமையின் பெறுமதியை அறிய சிவராத்திரி வழிவகுக்கும்!

இன, மத, கலாசார பல்வகைமையின் அழகு மற்றும் பெறுமதியை அறிந்துகொள்வதற்கு மஹா சிவராத்திரி தினம் வழிவகுக்கும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இந்துக்களால் மஹா சிவராத்திரி விரதம் இன்று (திங்கட்கிழமை) அனுஷ்டிக்கப்படுகின்றது.

அதனை முன்னிட்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்க வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் “ஞான ஒளியூடாக ஆன்மீக விடுதலை கிடைக்க வேண்டும் என்ற பிரார்த்தனையுடன், உலகம் முழுவதும் இந்து சமய மக்கள் ஒன்றிணைந்து வெகு விமரிசையாகவும் மிகுந்த பக்தியுடனும் மஹா சிவாரத்திரி தினத்தைக் கொண்டாடுகின்றனர்.

சிவபெருமானை வழிபடுவது இந்து மக்களின் சமய வழிபாடுகளில் முக்கிய இடத்தைப் பெறுகிறது.

சிவபெருமானின் பிரதிபலிப்பாக இயற்கை கருதப்படுவதுடன், அனைத்து உயிர்களினதும் பிறப்பிடம் சிவபெருமான் எனவும் இந்து பக்தர்கள் விசுவாசிக்கின்றனர்.

உலகிற்கு உயிர்ப்பினை வழங்குகின்ற, மனித வாழ்வினை வளப்படுத்துகின்ற சிவபெருமானுக்கு மிகவும் விருப்பமான இந்த இரவில், அனைவரும் ஒன்றாக விரதமிருந்து, இரவு முழுவதும் கண் விழித்துப் புண்ணிய கருமங்களில் ஈடுபட்டு சமயச் சடங்குகளை நிறைவேற்றுவதன் மூலம் ஆன்மீக விடுதலை கிடைப்பதாகக் கருதப்படுகிறது.

மகா சிவராத்திரி தினத்தை மிகுந்த பக்தியுடன் கொண்டாடும் சகோதர இந்து மக்களுக்காகப் பிரார்த்திப்பதுடன், ஆன்மீக விடுதலை மூலம் சாந்தி, சமாதானம் நிலைபெற வேண்டும் என வாழ்த்துகிறோம்” என தெரிவித்துள்ளார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net