புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்டன் பாலசிங்கம் மீது யுத்தக் குற்றச்சாட்டு!

விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்டன் பாலசிங்கம் மீது யுத்தக் குற்றச்சாட்டு!

விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல் ஆலோசகராக செயற்பட்ட அன்டன் பாலசிங்கம் போர் குற்றச் செயற்பாடுகளில் ஈடுபட்டார் என்பதற்கான தகுந்த ஆதாரங்கள் காணப்பட்ட பொழுதும் அவர் பிரித்தானியாவில் சுதந்திரமாகவே செயற்பட்டார் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

30 வருட கால பயங்கரவாத யுத்தத்தில் விடுதலைப் புலிகளின் அமைப்பு நாட்டில் பல்வேறு முறைகேடான சம்பவங்களை தோற்றுவித்தது.

வடக்கிலும், தெற்கிலும் அப்பாவி பொது மக்கள் தொடர்ந்து கொல்லப்பட்டனர். இறுதி யுத்தத்தின்போது தமிழ் இளைஞர் யுவதிகள் பலர் பலவந்தமான முறையில் விடுதலைப் புலிகள் அமைப்புடன் இணைக்கப்பட்டார்கள்.

விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல் ஆலோசகராக செயற்பட்ட அன்டன் பாலசிங்கம் போர் குற்றச் செயற்பாடுகளில் ஈடுபட்டார் என்பதற்கான தகுந்த ஆதாரங்கள் காணப்பட்ட பொழுதும் அவர் பிரித்தானியாவில் சுதந்திரமாகவே செயற்பட்டார்.

இலங்கையில் பயங்கரவாதிகளாக அடையாளம் காணப்பட்டவர்களில் பலர் இன்றும் மேற்குலக நாடுகளில் அரசாங்கத்தின் ஆதரவுடன் சுதந்திரமாக செயற்பட்டு எமது நாட்டு இராணுவத்தினருக்கு எதிராக இன்று குரல் எழுப்புகின்றார்கள்.

இலங்கை விவகாரத்தில் ஐக்கிய நாடுகளில் மனித உரிமை பேரவை ஒரு தலைபட்சமாகவே செயற்படுகின்றது.

மேற்குலக நாடுகளின் பார்வையில் விடுதலைப் புலிகள் அமைப்பு எவ்விதமான குற்றச் செயற்பாடுகளிலும் ஈடுபடாத அமைப்பாகவே காண்பிக்கப்பட்டுள்ளனர்.

இம்மாதம் 18ஆம் திகதி இலங்கை தொடர்பிலான விவாதம் மனித உரிமைகள் பேரவையிலான விவாதம் மனித உரிமைகள் பேரவையில் இடம்பெறவுள்ளது.

இதன்பொழுது பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைக்க வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் உட்பட ஐந்து தமிழ்க் கட்சிகள் ஐ.நா செல்லவுள்ளனர்.

நாட்டுக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை முன்வைக்கும் தரப்பினர் சிறப்பாகவும் துரிதமாகவும் செயற்படுகின்றார்கள்.

ஆனால் இராணுவத்தைப் பாதுகாக்க வேண்டிய அரசாங்கம் இவ்விடயத்தில் அமைதியாகவும் மந்தகரமாகவும் செயற்படுவது ஏற்றுக் கொள்ளப்படாது.

இரு தரப்பு குற்றங்களையும் மன்னிக்க வேண்டும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க உட்பட ஆளும் தரப்பின் உறுப்பினர்கள் குறிப்பிடுவது ஏற்றுக்கொள்ள முடியாது.

விடுதலைப் புலிகள் குறுகிய விடயங்களை மாத்திரம் மையப்படுத்தி நாட்டுக்கு எதிராகப் போராடினார்கள்.

ஆனால் இராணுவத்தினர் ஒட்டுமொத்த மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்தி நாட்டுக்காகப் போராடி வெற்றியடைந்தார்கள்.

ஆகவே இவ்விடயத்தில் விடுதலைப் புலிகளையும் இராணுவத்தினரையும் ஒன்றாக இணைத்து மதிப்பிட முடியாது. இரண்டு தரப்பினருக்கும் இடையைில் பாரிய வேறுபாடுகள் காணப்படுகின்றன.

இம்முறையும் மனித உரிமைகள் பேரவைக்கு ஏற்றாற்போலவே அரசாங்கம் செயற்படும். ஆட்சி மாற்றத்தின் பின்னர் மனித உரிமைகள் பேரவையின் எவ்விதமான நிபந்தனைகளுக்கும் அரசாங்கம் உட்படாது.

இராணுவத்தினருக்கு எதிராக இதுவரை காலமும் முன்னெடுக்கப்பட்டு வந்த பிரேரணைகள் அனைத்திலும் இருந்து விடுபடும் நடவடிக்கைகள் மாத்திரமே முன்னெடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net