வரவு-செலவு திட்டத்தால் வாய் அடைத்துப்போயுள்ள எதிர்க்கட்சி!
ஐக்கிய தேசிய கட்சி முன்வைத்துள்ள வரவு செலவு திட்டம் தேர்தல் வரவு செலவு திட்டம் என கூறியவர்கள் தற்போது வாயடைத்துப்போய் இருக்கின்றனர் என நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
கொழும்பில் (வியாழக்கிழமை) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“ஐக்கிய தேசிய கட்சியின் முதலாவது வரவு செலவு திட்டம் என்றே இதனை பார்க்கின்றேன். பொருளாதாரத்தை தாராளமயமாக்குதலை விரைவு படுத்துவதற்கான திட்டங்களை முன்வைத்துள்ளோம்.
வலுவான சமூக வர்த்தக பொருளாதாரதிற்குள் வலுவான சமூக பாதுகாப்பை பெற்றுக் கொடுப்பதற்கு இதில் பல்வேறு யோசனைகளை முன்வைத்துள்ளோம்.
அதன் காரணமாக தான் மக்களுக்கு பலம், ஏழைகளுக்கு பாதுகாப்பு என எண்டபிரைசர்ஸ் ஸ்ரீலங்கா என்ற தொனிப்பொருளில் கீழ் இந்த திட்டங்களை வைத்துள்ளோம்.
சிலர் இதனை தேர்தல் வரவு செலவு திட்டம் என கூறினார்கள், மக்களை ஏமாற்றி வாக்குறுதி அளிப்போம் என எண்ணினார்கள். கடந்த வருடங்களில் வரவு செலவுத் திட்டங்கள் சமர்பிக்கப்படும் போது எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மேற்கொள்ளும் தடைகளை இம்முறை காணவில்லை.
நாங்கள் தேர்தலை இலக்கு வைத்து வரவு செலவுத் திட்டத்தை முன்வைத்துள்ளதாக சிலர் குற்றம் சுமத்துகின்றனர். எனினும் இந்த வரவு செலவுத் திட்டம் தேர்தலை இலக்கு வைத்து முன்வைக்கவில்லை. இருப்பினும் இது தேர்தல் வருடம் என்பது உண்மைதான்” என கூறினார்.