பிரித்தானியாவிற்கு எந்த உரிமையும் கிடையாது!
இலங்கையின் உள்ளக விவகாரங்களில் தலையீடு செய்வதற்கு பிரித்தானியாவிற்கு எவ்வித உரிமையும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இராணுவத்தினரின் உரிமைகளைப் பாதுகாக்கும் அமைப்பின் தலைவர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர இதனை தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், ஜெனிவாவில் இடம்பெறும் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் கலந்துகொள்வதற்காக எதிர்வரும் 15ஆம் திகதி ஜெனிவா செல்கின்றோம் எனவும் அவர் கூறியுள்ளார்.
இது குறித்து தொடர்ந்தும் பேசிய அவர்,
“நாட்டின் உள்ளக விவகாரங்களில் தலையீடு செய்வதற்கு பிரித்தானியாவிற்கு எவ்வித உரிமையும் இல்லை என்பதை மனித உரிமைகள் கூட்டதொடரில் வலியுறுத்திக் கூறவுள்ளோம்.
நாங்கள் எம்முடைய தாய் நாட்டைப் பாதுகாப்பதற்காகவே போராடினோம்.
அவ்வாறிருக்க நாட்டிற்காகப் போராடிய இராணுவ வீரர்களை போர்க்குற்றவாளிகள் எனக்குறிப்பிட்டு சர்வதேச விசாரணைக்கு உட்படுத்துவது ஏற்றுக்கொள்ளப்பட முடியாததாகும்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட பிரிவினைவாத தமிழ் அரசியல்வாதிகளே இத்தகைய நிலையை ஏற்படுத்தியுள்ளனர்.
ஆளுங்கட்சியாக இருக்கின்ற ஐக்கிய தேசியக் கட்சிக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவின்றி இவ்வருடத்திற்கான வரவு செலவுத்திட்டத்தினை நிறைவேற்றிக்கொள்ள முடியாது.
எனவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூறுகின்ற விடயங்களுக்கு அமைவாகச் செயற்பட வேண்டிய அவசியம் ஐக்கிய தேசியக் கட்சிக்கு உள்ளது.
அதனாலேயே சர்வதேசத்திடம் எமது இராணுவத்தினரைக் காட்டிக்கொடுப்பதற்கு முயற்சித்து வருகின்றனர்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.