மத்தல விமான நிலைய ஒப்பந்தம் இறுதி நிலைக்கு தயார்!
மத்தல விமான நிலையத்தை இந்தியாவின் விமான நிலைய அதிகார சபையுடன் இணைந்து செயற்படுத்துவதற்கான, இறுதி உடன்பாட்டை எட்டுவதற்கான பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.
பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க அமைச்சரவை அனுமதியளித்துள்ள நிலையில், இந்த திட்டம் குறித்து இந்திய அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைகள் இடம்பெறவுள்ளன.
மத்தல விமான நிலையத்தை இயக்குவதற்காக இந்திய விமான நிலைய அதிகார சபை முன்வைத்த யோசனையை நடைமுறைப்படுத்தல் என்ற தலைப்பிலான அமைச்சரவைப் பத்திரம், கடந்த புதன்கிழமை அமைச்சரவைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அமைச்சர்கள் மங்கள சமரவீர, அர்ஜூன ரணதுங்க ஆகியோர் இணைந்து இந்த அமைச்சரவைப் பத்திரத்தை சமர்ப்பித்தனர்.
இதற்கமைய, அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட குழு இலங்கை அரசாங்கத்தின் சார்பில், இந்திய அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட அதிகாரிகளுடன் முறைப்படியான பேச்சுவார்த்தைகளை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்தப் பேச்சுவார்த்தைகளின் மூலம், இரண்டு நாடுகளுக்கும் இடையிலான உடன்பாடு இறுதி செய்யப்படவுள்ளது.