அரசாங்கத்துக்கு எதிரானவர்களுடன் கூட்டணி அமைக்கத் தயார்!

அரசாங்கத்துக்கு எதிரானவர்களுடன் கூட்டணி அமைக்கத் தயார்!

அரசாங்கத்துக்கு எதிரானவர்களுடன் கூட்டணி அமைக்கத் தயார் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (திங்கட்கிழமை) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“அரசாங்கத்துக்கு எதிராக அமைக்கப்படும் எந்தவொரு கூட்டணிக்கும் ஒத்துழைப்பு வழங்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தயாராக இருக்கின்றது.

நாட்டினது நிலமை மிகவும் மோசமாகச் சென்று கொண்டிருக்கின்றது. இனியும் இந்த அரசாங்கத்தை நாட்டை ஆட்சி செய்ய அனுமதிக்க முடியாது.

அரசாங்கத்துக்கு எதிராக கூட்டணி குறித்து எந்தக் கட்சியாக இருந்தாலும் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்குத் தயார்” என தயாசிறி ஜயசேகர மேலும் குறிப்பிட்டார்.

இதேவேளை, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆகியன இணைந்து புதிய கூட்டணி அமைப்பது குறித்து பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருந்தாலும் சில முரண்பாடுகள் காரணமாக தொடர்ந்தும் இழுபறிநிலை காணப்படுகின்றது.

குறிப்பாக இருகட்சிகளுக்குமிடையில் பொது வேட்பாளரைத் தெரிவு செய்வதில் சிக்கல்நிலை தோன்றியிருந்ததால் அண்மையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தை எதுவித தீர்வுமின்றி முடிவடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net