பாக்கு நீரிணைப் பகுதிகளில் சீன அதிகாரிகள் குழு ஆய்வு!

பாக்கு நீரிணைப் பகுதிகளில் சீன அதிகாரிகள் குழு ஆய்வு!

இலங்கைக்கான சீனத் தூதுவர் செங் ஷியுவான் தலைமையிலான சீன அதிகாரிகள் குழு பாக்கு நீரிணை மற்றும் இந்திய எல்லைப் பகுதியில் உள்ள மணல் திட்டுகளைச் சென்று பார்வையிட்டுள்ளனர்.

மற்றும் இவ்விஜயத்தின்போது இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் உள்ள பாக்கு நீரிணையில் இலங்கை கடற்படையின் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து சீன அதிகாரிகள் கேட்டறிந்து கொண்டனர்.

அதனையடுத்து, தலைமன்னார் இறங்குதுறைப் பகுதியைச் சென்று பார்வையிட்ட சீன தூதுவர் உள்ளிட்ட அதிகாரிகள், இலங்கை கடற்படையின் ரோந்துப் படகு மூலம், இந்திய கடல் எல்லைப் பகுதிக்கும் சென்றனர்.

இரண்டு நாடுகளுக்கும் இடையில் உள்ள எல்லையில் அமைந்துள்ள மணல் திட்டுகளையும் பார்வையிட்ட சீன அதிகாரிகள் அவற்றைப் படம்பிடித்துக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சீனத் தூதுவர் செங் ஷியுவான் மற்றும் ஆறு சீன தூதரக அதிகாரிகள் கடந்த 5ஆம் மற்றும் 6ஆம் திகதிகளில் வடக்கில் பயணம் மேற்கொண்டிருந்தனர்.

இதன்போது, கடந்த 6ஆம் திகதி தலைமன்னாரில் உள்ள வட.மேற்குப் பிராந்திய கடற்படைத் தலைமையகத்துக்குச் சென்றிருந்த சீன அதிகாரிகள் குழு, அங்கு இலங்கை கடற்படையினருடன் பேச்சுக்களை நடத்தியிருந்தனர்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net