ஆயுதங்கள், ஹெரோயின், ஆகியவற்றுக்கும் மதூஸுக்கும் தொடர்பு ; மரணச்சடங்கு இறுவெட்டும் மீட்பு

கைப்பற்றப்பட்ட வைரக்கல், ஹெரோயின், ஆயுதங்கள் ஆகியவற்றுக்கும் மதூஸுக்கும் தொடர்பு ? ; மரணச்சடங்கு இறுவெட்டும் மீட்பு

பெறுமதிவாய்ந்த வைரக்கல்லுடன் கைதுசெய்யப்பட்ட கெவுமா என அழைக்கப்படும் கெலும் இந்திக தங்கியிருந்ததாக தெரிவிக்கப்படும் மொரட்டுவை – ராவத்தையில் அமைந்துள்ள வீட்டிலிருந்து மீட்கப்பட்டுள்ள ஹெரோயின் தொகை மற்றும் ஆயுதக் களஞ்சியசாலை ஆகியவற்றுக்கும் டுபாயில் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள பாதாள உலக குழு தலைவர் மாகந்துரே மதூஸுக்கும் தொடர்புள்ளதென பொலிஸாரின் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் நேற்றைய முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது மொரட்டுவை – ராவத்தையில் அமைந்துள்ள வீட்டிலிருந்து 180 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான 177.46 கிலோ கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாகவும் அவ் வீட்டிலிருநு்து ரி-56 ரக துப்பாக்கியொன்றும் அதற்குப் பயன்படுத்துவதற்கான 2803 ரவைகள், கைத்துப்பாக்கியொன்று மற்றும் மேலும் சில ஆயுதங்களும் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதையடுத்து பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் டுபாயில் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள பாதாள உலகக் குழுவின் தலைவர் மாகந்துரே மதூஸுக்கும் மொரட்டுவை – ராவத்தை வீட்டில் மீட்கப்பட்ட பொருட்களுக்கும் தொடர்பிருப்பதாகவும் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

மாகந்துரே மதூஸ் குறித்த வீட்டை விலைக்கு வாங்கி, அங்கு ஹெரோயினை களஞ்சியப்படுத்தி வைத்துள்ளதாகவும் அவை பல இடங்களில் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதேவேளை, குறித்த வீட்டில் மாகந்துரே மதூஷுன் தந்தையின் மரணச் சடங்கு நிகழ்வு பதிவுசெய்யப்பட்ட இருவெட்டு ஒன்றும் மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net