வடக்கில் வாக்குகளை பெற புலியாக மாறியுள்ள விஜயகலா.
இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் வடக்கில் வாக்குகளை பெற தற்போது விடுதலைப் புலியாக மாறியுள்ளதாகவும், போர் நடந்த காலத்தில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான நிலைப்பாட்டில் அவர் இருந்தாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
கல்வியமைச்சிற்கான வரவு செலவு திட்ட நிதி ஒதுக்கீட்டு விவாதத்தில் தயாசிறி ஜயசேகர உரையாற்றிக் கொண்டிருந்த போது விஜயகலா மகேஸ்வரன் குறுகிட்டு பேசியதுடன் 20 ஆண்டுகள் வடக்கு, கிழக்கில் இருந்த வெற்றிடங்களை தெற்கிற்கு மாற்றிக் கொண்டதாக குறிப்பிட்டார்.
இதற்கு பதிலளித்த தயாசிறி ஜயசேகர, “இல்லை அது தவறு. ஐயோ கலா நீங்கள் இப்படி நடந்து கொள்ள வேண்டாம்.
இது ஒரு வாதம் அல்ல. அங்கிருந்தவற்றை இங்கு கொண்டு வரவில்லை. அப்படி கொண்டு வரவும் முடியாது.
நிதி ஒதுக்கப்படுமாயின் ஒவ்வொரு மாகாணங்களுக்கும் ஒதுக்கப்படும். இதனால் அதனை பேச வேண்டாம். போர் நடைபெற்ற காலத்தில் வடக்கில் கல்வி வீழ்ச்சியடைந்தது.
அதில் எவரும் தலையிடவில்லை என்ற காரணத்தில் அது வீழ்ச்சியடைந்தது. அப்போது உங்களது கணவரும் என்னுடன் இந்த இடத்தில் இருந்தார்.
அந்த காலத்தில் நீங்கள் வடக்கிற்கு செல்லவில்லை. இங்குதான் இருந்தீர்கள். தற்போது தான் நீங்கள் கொஞ்சம் எல்.டி.டி.ஈயாக மாறியுள்ளீர்கள்.
அந்த காலத்தில் அதெல்லாம் இருக்கவில்லை. கலா அப்போது விடுதலைப் புலிகளுக்கு எதிரானவர். கணவரை கொலை செய்யும் போது புலிகளுக்கு எதிராக இருந்தார்.
அடுத்த முறை வாக்குகளை பெற புலிகளுக்கு ஆதரவு வழங்க பார்க்கின்றார். குழப்பமடைய வேண்டாம். கலா கொழும்பிலேயே இருந்தார். இவர் எப்போது யாழ்ப்பாணத்தில் இருந்தார்” எனக் கூறினார்.
அதேவேளை சிங்களம் மற்றும் தமிழ் மொழிமூலப் பாடசாலைகளில் தலா 12000 ஆசிரியர் பணியிடங்களுக்கான வெற்றிடம் இருப்பதாகவும் இதனை தீர்க்க அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தயாசிறி ஜயசேகர கேட்டுக்கொண்டார்.