அவுஸ்திரேலியாவில் துப்பாக்கிச் சூடு நடத்திய இலங்கை தமிழ் இளைஞர்! மூன்று நாட்களின் பின் அதிரடியாக கைது.
அவுஸ்திரேலியா பேர்த் நகரில் இளைஞர் ஒருவரை துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் இலங்கை பின்னணியை கொண்ட தமிழ் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் மூன்று நாட்களாக மேற்கொள்ளப்பட்டு வந்த விசாரணைகளின் பின்னர் சந்தேகநபரான குறித்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பேர்த் மாநகரின் Langford பிரதேசத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ள இந்த துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் தாக்குதலுக்குள்ளான இளைஞர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
தாக்குதலை நடத்தியதாக கூறப்படும், 28 வயதான Hari Ganeshan என்ற பெயருடைய குறிப்பிட்ட இளைஞர் தாக்குதல் நடத்திய ஆயுதத்துடன் தப்பியோடியிருந்தார்.
தாக்குதல் மேற்கொண்டவரும் தாக்குதலுக்குள்ளானவரும் ஒருவருக்கு ஒருவர் அறிமுகமானவர்கள் என்றும் அந்நாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையிலேயே, சந்தேகநபரான இலங்கை இளைஞரை பொலிஸார் தேடிவந்த நிலையில், மூன்று நாட்களின் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்தியில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, குறித்த இளைஞர் இலங்கையிலிருந்து இரண்டு வயதில் அவுஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்தவர் என்று அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.