ராஜபக்ஷவினர் ஆட்சிக்கு வந்தால் இலங்கையுடனான உறவில் விரிசல் ஏற்படும்!
ராஜபக்ஷவினர் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இலங்கை-அமெரிக்காவிற்கு இடையிலான உறவு பாதிப்படையுமென அமெரிக்காவின் பழமைவாத சிந்தனையாளரான, ஆய்வாளர் ஜெப் ஸ்மித் தெரிவித்துள்ளார்.
ஹெரிரேஜ் பவுண்டேசனின் ஆய்வாளர் ஜெப் ஸ்மித் தயாரித்துள்ள ‘இலங்கை சுதந்திரமான திறந்த இந்தோ- பசுபிக் மூலோபாயத்துக்கு ஒரு சோதனையான வழக்கு’ என்ற தலைப்பிலான அறிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
குறித்த அறிக்கையில் அவர் மேலம் தெரிவிக்கையில்,
“இலங்கையுடன் இராஜதந்திர மற்றும் இராணுவ தொடர்புகளுக்கு அமெரிக்கா முன்னுரிமை அளிக்க வேண்டும்
2015இல் மஹிந்த ராஜபக்ஷ வெளியேற்றப்பட்டதில் இருந்து, இலங்கை – அமெரிக்க உறவுகள், தளைத்தோங்கியுள்ளது.
இந்தியப் பெருங்கடலில் அமெரிக்க கடற்படையின் புதிய விநியோக கேந்திரமாக இலங்கை மாறியுள்ளது.
இலங்கை விவகாரம், தவறாக கையாளப்பட்டால், இலங்கையில் ராஜபக்ஷவினர் மீண்டும் ஆட்சிக்கு வரும் நிலை ஏற்படும்.
ஆட்சிக்கவிழ்ப்பு தோல்வியடைந்தாலும், வரவிருக்கும் தேர்தல்களில் செல்வாக்குமிக்க ராஜபக்ஷ குடும்பத்தினர், அதிகாரத்திற்கு திரும்புவர் என்று அரசியல் ஆய்வாளர்கள் கணிக்கின்றனர்.
அது, 2015 ஆட்சி மாற்றத்தை அடுத்து இலங்கை – அமெரிக்கா இடையிலான உறவுகளில் அண்மையில் பெற்றுக்கொள்ளப்பட்ட வெற்றிகளை பாதிக்கும்.
அத்துடன், இந்தியப் பெருங்கடலில் சீனா காலூன்றுவதற்கு வழிவகுக்கும். சீனாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான போட்டி அதிகரிக்கும்.
ராஜபக்ஷ ஆட்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட பின்னர், இலங்கை அதிகம் சுதந்திரமான, திறந்த நாடாக மாறியுள்ளது.
அடுத்து எந்த அரசாங்கம் பதவிக்கு வந்தாலும், இந்தப் போக்கில் இருந்து மாறாத தன்மையை உறுதிப்படுத்துவதற்கு அமெரிக்காவும், இலங்கையும் ஆர்வம் கொண்டுள்ளன” என்றும் அந்த அறிக்கையில் ஆய்வாளர் ஜெப் ஸ்மித் தெரிவித்துள்ளார்.