நாவலப்பிட்டியில் 13 வயது சிறுவன் தூக்கிட்டு தற்கொலை!

நாவலப்பிட்டியில் 13 வயது சிறுவன் தூக்கிட்டு தற்கொலை!

பாடசாலைச் சிறுவன் தனது வீட்டினுள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சம்பவம் நேற்று (செவ்வாய்கிழமை) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சிறுவன் நாவலப்பிட்டி கல்லோயா பகுதியைச் சேர்ந்த 13 வயதான துமேஸ் மதுஷன் என பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சிறுவனின் தாய் தொழில் நிமிர்த்தம் மத்திய கிழக்கு நாடு ஒன்றில் பணிபுரிந்து வருவதாகவும் சிறுவனுக்கு தந்தை இல்லை எனவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதேவேளை, குறித்த சிறுவன் தமது பாட்டியின் பாராமரிப்பில் வளர்ந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் பாடசாலையின் ஊடாக சுற்றுலா செல்ல ஏற்பாடு செய்திருந்தபோதும் அந்த சுற்றுலா பயணத்திற்கு குறித்த சிறுவன் செல்லவில்லை எனவும் சிறுவனின் சகோதரன் பாடசாலை விட்டு வீடு வந்த போதே குறித்த சிறுவன் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்ததை கண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதனிடையே சிறுவன் தற்கொலை செய்து கொண்டமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என பொலிஸார் குறிப்பிட்டனர்.

சிறுவன்  பாடசாலைக்கு செல்லாது தனது பாட்டியின் சேலையில் வீட்டின் அறையில் தூக்கிட்டு கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் குறித்து மரண விசாரணைக்காக நாவலப்பிட்டி நீதிமன்ற நீதவான் தலைமையில் விசாரணைகள் இடம்பெற்று சட்டவைத்திய அதிகாரியின் பிரேத பரிசோதனைக்காக சடலம் நாவலப்பிட்டி மாவட்ட வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை நாவலப்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net