இரவில் ஒளிரும் அரிய வகை தேரை!

இரவில் ஒளிரும் அரிய வகை தேரை!

இரவில் ஒளிரும் அரிய வகை பூசணி தேரைகளை அபுதாபியின் நியூயார்க் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இயற்கையின் படைப்பில் ஏராளமான அதிசயங்கள் அன்றாடம் நிகழ்ந்து வருகிறது. இதில் கடந்த 2017-ம் ஆண்டில் இரவு நேரங்களில் மின்னும் புதிய வகை பச்சை தவளை ஆர்ஜென்டினாவில் வாழ்வது கண்டுபிடிக்கப்பட்டது.

தற்போது இரவு நேரத்தில் மற்றும் இனச்சேர்க்கைக்காக தனது உடலில் ஒளியை உமிழும் அரிய வகை பூசணி தேரை பிரேசில் நாட்டில் வாழ்வது தெரிய வந்துள்ளது.

இதை அபுதாபியிலுள்ள நியூயார்க் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

பகலில் அந்த தேரையின் நிறம் பூசணிக்காயின் உள்ளே இருப்பது போன்ற மஞ்சள் நிறத்தில் உள்ளது.

ஆனால் இரவு நேரங்களில் புற ஊதா கதிர் வெளிச்சத்தில் அந்த தேரையின் உடலிலுள்ள புள்ளிகள் அடர் நீலத்திலும், மற்ற பகுதிகள் இளஞ்சிவப்பு நிறத்திலும் மின்னுகின்றன.

குறுகிய ஒளி அலைகளை உள்வாங்கி பின் அவற்றை நீண்ட ஒளி அலையாக வெளியேற்றுவது அறிவியலில் ஒளிரும் தன்மை என்றழைக்கப்படுகிறது.

இரவில் அல்லது புற ஊதா கதிர்களை அந்த விலங்கின் மீது பாய்ச்சும் போது அவை ஒளிருகின்றன. இது அரிய வகை தேரையிடம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பவளப்பாறைகள், மீன், சுறாக்கள், கடல் ஆமை போன்ற பெரும்பாலான உயிரினங்களிடத்திலும், நிலத்தில் வாழும் சில வகை கிளிகள் மற்றும் தேள்களிடம் மட்டுமே புளோரசென்ட் இயல்பு இருந்தது.

தற்போது கண்டுபிடிக்கப்பட்ட தேரையிடம் அந்த இயல்பு இருப்பது விஞ்ஞானிகளை ஆச்சரியப்பட வைத்துள்ளது.

மனிதனைத் தவிர பிற உயிரினங்களுக்கு இந்த இயல்பு ஏன் இருக்கிறது என்பது குறித்து விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.

பாலின ஈர்ப்பு, தகவல் பரிமாற்றம் உள்ளிட்ட காரணங்களால் அவைகள் ஒளியை உமிழ்கிறது என தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net