புத்தாண்டில் சோகம் : 24 மணித்தியாலங்களில் 12 பேர் பலி!

புத்தாண்டில் சோகம் : இலங்கையில் 24 மணித்தியாலங்களில் 12 பேர் பலி!

புத்தாண்டுக் காலப்பகுதியில் மதுபானம் அருந்தி வாகனத்தை செலுத்தும் சாரதிகள் மற்றும் வீதி விதிமுறைகளை மீறும் சாரதிகளைக் கைது செய்யும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கை எதிர்வரும் 22ம் திகதி வரை முன்னெடுக்கப்படும் என்று பொலிசார் தெரிவித்துள்ளனர். இவர்களுக்கு எதிராக கடுமையான சட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.

கடந்த 24 மணித்தியாலங்களில், போதையில் வாகனத்தைச் செலுத்தி 520 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிஸ் போக்குவரத்து வாகனப்பிரிவு பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

முழு நாட்டையும் உள்ளடக்கிய வகையில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கையில் 8 ஆயிரத்திற்கு மேற்பட்ட பொலிசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

ஏப்ரல் மாதம் 10ம் திகதி தொடக்கம் 20ம் திகதி வரையில் கூடுதலான வாகன விபத்துக்கள் இடம்பெறுவதாக அறிக்கைகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

விபத்துக்களைக் குறைப்பதற்கும் அதிக மதுபோதையில் வேகத்துடனும் கவனக் குறைவாகவும் வாகனம் செலுத்தும் சாரதிகளைக் கைது செய்ய நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருப்பதாக பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

கடந்த 24 மணித்தியாலங்களில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 12 பேர் உயிரிழந்து 120 பேர் காயமடைந்துள்ளனர்.

Copyright © 3078 Mukadu · All rights reserved · designed by Speed IT net