மரணித்துப் போன மனிதாபிமானம்! கொலைக்கு யார் பொறுப்பு!

இலங்கையில் மரணித்துப் போன மனிதாபிமானம்! கொலைக்கு யார் பொறுப்பு!

மனிதன் என்றாலே மனிநேயம் கொண்ட ஓர் உயிர் என்றே நாம் இத்தனை காலம் கருத்திக் கொண்டிருந்தோம், ஆனால் இன்றைய உலகில் நடக்கும் செயல்களை காணுகையில், மனிதநேயம் என்பது இறந்து மண்ணோடு புதைந்து விட்டதேன்றே எண்ண தோன்றுகின்றது.

இதனை கேட்டதும் அதிசயிக்கலாம் ஆயினும் அதுவே உண்மை. இதனை ஏற்க மறுக்கும் மனங்களும் அண்மையில் நடந்த கொடூர கொலை சம்பவத்தால் ஒரு இளைஞனின் உயிர் அநியாயமாக பறிபோன கதை கேட்டால், மறுத்ததை எண்ணி ஒரு கனம் மனம் கலங்கும்.

அண்மையில் தமிழர் தலைநகரான திருகோணமலையில் 21 வயதான இளைஞன் தனது நண்பனாலேயே கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார்.

இதில் என்ன மனிதநேயமில்லை? தினசரி ஊருக்கு ஊர், நாட்டுக்கு நாடு என்று நடப்பவை தானே? ஊடகங்களில் நாளுக்கு நாள் இது போன்ற பல செய்திகள் வெளிவந்த வண்ணமாக தானே உள்ளது என்று சட்டென எண்ணி விடுகின்றது நமது மனது.

எனினும் இந்த கொலை சம்பவம் கொஞ்சம் வித்தியாசமானது தான்.

திருகோணமலை துறைமுகப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், இரு நண்பர்களுக்கிடையில் ஏற்பட்ட காதல் விவகாரத்தால் ஒரு இளைஞன் மற்றைய இளைஞனை கழுத்ததறுத்து கொலை செய்துள்ளார்.

திருகோணமலை நீதிமன்ற வீதி, வில்லூன்றி பகுதியைச் சேர்ந்த தங்கதுரை தனுஷன் என்ற இளைஞனே கடந்த செவ்வாய் கிழமை இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த குறித்த இளைஞன் சம்பவதினத்தன்று வீட்டில் இருந்த வேளையில் அவரது நண்பர் வீட்டிற்கு வந்து வெளியே செல்வதற்காக அவரை அழைத்துள்ளார். எனினும் தனுஷன் தன்னுடைய மோட்டார் சைக்கிள் பழுதாகியுள்ளது என்று கூறியுள்ளார்.

இதனையடுத்து, தனுஷனின் நண்பர் என்னுடைய மோட்டார் சைக்கிளில் செல்லலாம் என்று அழைத்து தனுஷனையே மோட்டார் சைக்கிளை செலுத்துமாறு கூறி பின்னே அமர்ந்து வந்துள்ளார்.

திருகோணமலை கடற்படைத்தளத்திற்கு அருகாமையில் உள்ள வெற்றுக்காணிக்கு மோட்டார் சைக்களில் சென்றுள்ளனர். அதனைத்தொடர்ந்து, அங்கு வைத்தே பின்னே அமர்ந்து வந்த நபர் திடீரென தனுஷனின் கழுத்தை அறுத்து விட்டு தப்பி சென்றுள்ளார்.

உடனடியாக தனுஷன் கழுத்தறுப்பட்ட நிலையில், தனக்கு உதவுமாறு கோரி ஒரு முச்சக்கரவண்டி சாரதியிடம் சென்று கேட்ட போதும் அவர் தனுஷனுக்கு உதவி செய்ய முன்வரவில்லை.

அதன்பின் ஓடிச்சென்று கடற்படைத்தளத்திற்கு முன்பாக விழுந்துள்ளார். இதனையடுத்து அவரை அங்கிருந்தவர்கள் வைத்தியசாலைக்கு கொண்டுச் சென்ற போதே அவர் உயிரிழந்துள்ளார்.

இதனடிப்படையிலேயே உற்றுநோக்கின் கொலையாளியாக தனுஷனின் நண்பன் காணப்பட்டாலும், மறைமுகமான கொலையாளியாக அந்த முச்சக்கர வண்டி சாரதியே இனம் காணப்படுகின்றார்.

ஏனெனில் தனுஷன் வந்து உதவி கோரிய வேளையே தாமதிக்காது அவரை உடனடியாக அருகில் இருக்கும் வைத்தியசாலைக்கு அழைத்து சென்றிருந்தால் நிச்சயமாக அவரை காப்பாற்றி இருக்கலாம் என்றும், வைத்தியசாலைக்கு செல்ல 4 நிமிடங்கள் போதுமானதென்றும் அந்த பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

ஏன் அதனை அந்த சாரதி செய்ய தவறினார்? கேள்விக்கான பதில் சுயநலம், இவனை காப்பாற்ற சென்றால் தனக்கு நேரும் பிரச்சினைகள் எண்ணி பயம்.

அந்த சில நிமிடங்கள் சுயநலம், பயம் இவை இரண்டு சேர்ந்து மனிதநேயத்தை வேறோடு அழித்து விட்டன.

என்ன மாதிரியான ஒரு சுயநலம் நிறைந்த உலகிலும், மனிதநேயமற்ற சமூகத்தில் நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று எங்கள் மீதே எங்களுக்கு கோபம் வர வேண்டும்.

அதே கழுத்தறுப்பட்ட தனுஷன் அந்த முச்சக்கரவண்டி சாரதியின் மகனாக இருந்தால் அவர் நிச்சயம் துடிதுடித் திருப்பார். உயிர் என்றாலும் தன்னுடைய உறவானால் மாத்திரமே மதிப்பு, பிற உயிர் என்றால் ஒருவித அலட்சியம்.

மனிதர்களே நாங்கள் ஒரு கனம் சிந்திக்க வேண்டும் இந்த உலகில் யாருக்கும் யாரது உயிரை பறிப்பதற்கும் உரிமையில்லை. எனின்னும் சிந்திக்கும் தன்மையிழந்த சில மூடர் கூட்டங்கள் அதனை ஏற்காது இவ்வாறான கொலைகளிலும், வன்முறை செயல்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனை நாங்கள் வண்மையாக கண்டிக்க வேண்டும். கொலையாளிகளில் பார்க்க மிகவும் கொடூரமானவர்கள் தான் இந்த மனிதநேயம் இன்றி செயற்படும் மறைமுக கொலையாளிகள்.

சுயநலமான மனநிலையிலிருந்து நாங்கள் வெளிவர வேண்டும், நம்மவர்களுக்காக மட்டும் வாழாது பிற உயிர்களையும் மதிக்க வேண்டியது நமது கடமை.

அதேபோல இவ்வாறு ஒரு உயிர் பரிதாபகரமாக செல்வதற்கு நாம் மறைமுகமாக கூட காரணமாகிவிடக்கூடாது, இனியாவது இந்த முச்சகரவண்டி சாரதி போல் செயற்படாது மனிதநேயத்துடன் செயற்பட்டு பிற உயிர்களை மதித்து முடிந்த வரை காப்பாற்றுவோம் என நமக்கு நாமே உறுதியளித்து கொள்வோம்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net