மைத்திரிக்கும் ரணிலுக்கும் இடையிலான மோதலை சாதகமாக பயன்படுத்தியதா ஐ.எஸ்?

மைத்திரிக்கும் ரணிலுக்கும் இடையிலான மோதலை சாதகமாக பயன்படுத்தியதா ஐ.எஸ்?

அரசியல் ரீதியாக காணப்படுகின்ற முரண்பாடுகள் தேசிய பாதுகாப்பு வலுவிழப்பதற்கு காரணமாகியுள்ளதாக முன்வைக்கப்பட்டு வரும் குற்றச்சாட்டுக்கள் குறித்து தொலைத்தொடர்பு, டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள், வெளிநாட்டு வேலைவாய்பு மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ விளக்கமளித்துள்ளார்.

தமிழ் ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள நேர்காணல் ஒன்றிலேயே அவர் இதுகுறித்து விளக்கமளித்துள்ளார்.

இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர்,

‘ஏற்கனவே தகவல்கள் கிடைத்திருந்தபோதும் ஜனாதிபதி, பிரதமருக்கு தெரிவிக்கப்படாது பாதுகாப்புச் சபையில் கலந்துரையாடப்படாது விடப்பட்டது ஏன்? இதற்கான பொறுப்பினை யார் ஏற்பது என்பது பிரதான விடயமாகின்றது.

அடுத்ததாக ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் இலங்கையை விடவும் அதியுச்ச பாதுகாப்பு காணப்பட்ட அமெரிக்கா, கனடா போன்ற வல்லாதிக்க நாடுகளுக்குள் கூட பிரவேசித்தவர்களாகின்றனர்.

அவர்களுக்கு தீவிரவாதம் மட்டுமே தெரிந்தவொரு மொழியாகின்றது. மஹிந்த ராஜபக்ஷ பதவியில் இருந்திருந்தாலோ பாதுகாப்புச் செயலாளராக கோட்டாபய ராஜபக்ஷ இருந்திருந்தாலோ இந்த தீவிரவாத அமைப்பினை தடுத்திருக்கலாம் என்ற நிலைப்பாட்டினைக் கொள்வது தவறாகும்.

தனி ஈழத்திற்காக இலங்கையின் ஒரு பகுதியை மையப்படுத்திக்கொண்டு போராடிய விடுதலைப்புலிகளுடன் மோதல்களை நடத்துவதை விடவும் ஐ.எஸ்.ஐ.எஸ் உடன் மோதுவது என்பது இலகுவான விடயமல்ல.

ஆயுத இயக்கமாக இல்லாது மதத்தின் பின்னால் இருந்து இயங்கும் அமைப்பாகும். இலகுவாக அடையாளம் காண்பது கடினம்.

ஆகவே உயிர்நீத்தவர்களுக்காகவும், இழப்பீடுகளுக்காவும் கவலை அடைவதை விடவும் இந்த சம்பவத்தினை பயன்படுத்தியாவது அரசாங்கத்தினை கவிழ்க்க முடியும் எனக் கருதுவது கவலைக்குரிய விடயமாகும்’ என குறிப்பிட்டுள்ளார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net