நாட்டில் ஸ்திரமின்மையை ஏற்படுத்துவதே பயங்கரவாதிகளின் நோக்கம்!

நாட்டில் ஸ்திரமின்மையை ஏற்படுத்துவதே பயங்கரவாதிகளின் நோக்கம்!

நாட்டில் ஸ்திரமின்மையை ஏற்படுத்தி நாம் பெற்றுக்கொண்ட அனைத்து வெற்றிகளையும் தோற்கடிப்பதே பயங்கரவாத தாக்குதல்களின் நோக்கம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

சமூக, அரசியல், பொருளாதாரச் சிக்கல்களை வெற்றிகொண்டு, அமைதியான சூழலொன்றில் நிலைபேறான அபிவிருத்தியை நோக்கி அடியெடுத்து வைத்த எமது நாடு பயங்கரவாதிகளின் திடீர் தாக்குதல்கள் காரணமாக எதிர்கொண்ட தாக்கம் மிகவும் பாரியதென்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச உழைப்பாளர்கள் தினத்தை முன்னிட்டு அவர் இன்று (புதன்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இதனை தெரிவித்துள்ளார்.

குறித்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

வேலை செய்யும் மக்களின் தினமாக சர்வதேச ரீதியில் அங்கீகாரம் பெற்றுள்ள மே தினம் இம்முறை நாட்டுக்காக வியர்வை சிந்தி, உழைத்த அப்பாவி மக்கள் கொடிய பயங்கரவாதத் தாக்குதல் காரணமாக உயிரிழந்து, காயமடைந்துள்ள சோகமானதொரு சந்தர்ப்பத்திலேயே எம்மை அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

அத்துடன் இது நாட்டின் பாதுகாப்பு, பொருளாதாரம், அதன் இருப்பு என்பன பாரிய சவாலை எதிர்நோக்கியுள்ள முக்கிய சந்தர்ப்பமென்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தொழிலாளர் உழைப்பின் உண்மையான அர்த்தம் சமத்துவம், சகோதரத்துவம், சுயாதீனம் ஆகிய உயர் இலக்குகளிலேயே பொதிந்துள்ளன.

நாம் விவசாய நிலத்தில், தொழிற்சாலையில், நவீன தொழிநுட்பம் மிகுந்த தொழில் நிலையங்கள் போன்ற எந்த இடத்தில் பணியாற்றினாலும் இனவாதம் அல்லது மதவாதத்தை ஒதுக்கிவிட்டு மனிதநேயத்திற்கு மதிப்பளிக்க கடமைப்பட்டவர்களாக உள்ளோம்.

அப்போது தான் தனிநபர் என்ற வகையிலும், ஒட்டுமொத்த சமூகம் என்ற வகையிலும் நாட்டின் சமூக, பொருளாதார அபிவிருத்திக்கு எம்மால் பங்களிப்புச் செய்ய முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதுவரை நாம் பெற்றுக்கொண்ட முன்னேற்றத்தை தீவிரவாத சக்திகள் தடுப்பதற்கு இடமளிக்காது நாம் விழிப்புணர்வுடன் செயற்பட வேண்டியது கட்டாயமென்றும் நமது முன்பே காணப்படும் சமூக, பொருளாதார, அரசியல் சவால்களை வெற்றிகொள்ள நாம் ஒற்றுமையாகவும், மிகுந்த திடவுறுதியுடன் எழுந்து நிற்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

வேலை செய்யும் மக்களின் உழைப்புக்கு உரிய பெறுமானம் வழங்கப்படும் நீதியான சமூகமொன்றைக் கட்டியெழுப்ப இம்முறை மே தினத்தில் அர்ப்பணிப்புடன் செயற்படுவோமென்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Copyright © 7740 Mukadu · All rights reserved · designed by Speed IT net