உலகக் கிண்ணத் தொடரில் இந்தியா அரையிறுதிக்கு தகுதி பெறுவது உறுதி!

உலகக் கிண்ணத் தொடரில் இந்தியா அரையிறுதிக்கு தகுதி பெறுவது உறுதி!

“உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி பெறுவது உறுதி” என்று இந்திய அணியின் முன்னாள் அணித் தலைவர் கபில்தேவ் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்தில் இடம்பெறவுள்ள உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் விராட்கோலி தலைமையிலான இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கும் என்பது குறித்து 1983-ம் ஆண்டில் உலகக் கிண்ணத்தை வெற்றி கொண்ட இந்திய அணியின் நட்சத்திர தலைவர் கபில்தேவ் அளித்த செவ்வியொன்றிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

“உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியில் இளம் மற்றும் அனுபவம் வாய்ந்த வீரர்கள் சம விகிதாசாரத்தில் இடம்பிடித்துள்ளனர். அந்த வகையில் மற்ற அணிகளை விட இந்திய அணி அதிக அனுபவம் கொண்டதாகும்.

வீரர்கள் கலவை நிகரான விகிதத்தில் உள்ளது. 4 வேகப்பந்து வீச்சாளர்களும், 3 சுழற்பந்து வீச்சாளர்களும், விராட்கோலி, டோனி ஆகியோரும் அணியில் அங்கம் வகிக்கிறார்கள். டோனியும், விராட்கோலியும் இந்திய அணிக்கு சிறப்பான பங்களிப்பை வழங்கி வருகிறார்கள். 4 வேகப்பந்து வீச்சாளர்களும் நல்ல நிலையில் உள்ளனர்.

இங்கிலாந்தின் ஆடுகளங்கள் அவர்கள் பந்தை சுழற்ற உதவியாக இருக்கும். முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் மணிக்கு 145 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீசி களத்தை சூடுபிடிக்க வைக்கிறார்கள்.

இங்கிலாந்து, நடப்பு சாம்பியன் அவுஸ்ரேலியா அணிகளுடன் இந்தியாவும் அரையிறுதிக்கு தகுதி பெறும். இந்திய அணி உறுதியாக அரையிறுதிக்கு முன்னேறும்.

அதன் பின்னர் போட்டி நிச்சயம் கடினமாக இருக்கும். அரைஇறுதிக்கு பிறகு முன்னேறுவதில் அதிர்ஷ்டமும், தனிப்பட்ட வீரர்கள் மற்றும் அணியின் கூட்டு முயற்சியும் அவசியமானதாகும்.

இங்கிலாந்து, அவுஸ்ரேலியா, இந்தியா அணிகள் மற்ற அணிகளை விட வலுவானதாகும். நியூசிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகளின் அணிகள் ஆச்சரியம் அளிக்கக்கூடியவையாகும்.

கடந்த 10 ஆண்டுகளில் கிரிக்கெட்டில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. தற்போதைய கால கட்டத்தில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் மட்டுமின்றி யாரும் 4-வது வீரராக களம் இறங்கி விளையாட முடியும்.

ஹர்திக் பாண்ட்யாவுக்கு அழுத்தம் கொடுக்கக்கூடாது. அவரிடம் நிறைய திறமை இருக்கிறது. அவர் தனது இயல்பான ஆட்டத்தை விளையாட விட வேண்டும்.

நான் எந்தவொரு வீரரையும், மற்றொரு வீரருடன் ஒப்பிட்டு பார்க்க விரும்பமாட்டேன். ஏனெனில் அது அந்த வீரருக்கு நெருக்கடியை அளிக்கும்” என்று கபில்தேவ் தெரிவித்துள்ளார்.

Copyright © 3241 Mukadu · All rights reserved · designed by Speed IT net